Breaking News
Home / சுற்றுலா / இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக புகார்; பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக புகார்; பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

சென்னை: வீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக எழுந்த புகாரின்பேரில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை, குடும்ப சூழல் காரணமாக அவரது பெற்றோர் பல்லாவரம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் வீட்டு வேலை செய்ய (மாத சம்பளத்துக்கு) 7 மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளனர்.

திருவான்மியூர், சவுத் அவென்யூவில் வசித்து வந்த அவரும், அவரது மனைவி மெர்லினாவும் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை வேலை வாங்குகிறோம் என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக இரவு, பகலாக வேலை வாங்கியதுடன் அவரது உடலின் பல்வேறு பகுதிகளில் காயம் மற்றும் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

வேலை பிடிக்கவில்லை வீட்டுக்கு போகிறேன் என கிளம்பிய அப்பெண்ணை தடுத்து நிறுத்தி கட்டாயப்படுத்தி தங்க வைத்து தாக்கி காயப்படுத்தியதாகவும் தெரிகிறது. பேசியபடி சம்பளத்தையும் கொடுக்கவில்லையாம். இதுகுறித்து வெளியே சொன்னால் குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பொங்கலையொட்டி சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட அப்பெண், பெற்றோரிடம் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை கூறி கதறி அழுதுள்ளார். காயங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவமனை சார்பில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அக்காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, அப்பெண் திமுக எம்எல்ஏவின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா தன்னை அசிங்கமாக பேசியும், அடித்தும் காயப்படுத்தியது உட்பட தனக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து புகாரும் அளித்துள்ளார். இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான இருவர் மீதும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக சம்பந்தப்பட்ட இளம்பெண், எம்எல்ஏ மகன் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

திமுக எம்எல்ஏ விளக்கம்: இந்த விவகாரம் குறித்து திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி கூறும்போது, ‘மக்கள் பணியாற்றி வருகிறேன். 7 ஆண்டுகளுக்கு முன்னர் மகனுக்கு திருமணம் செய்து வைத்தேன். அவர் குடும்பத்துடன் திருவான்மியூரில் வசிக்கிறார். அவர்கள் எப்போதாவது வருவார்கள், போவார்கள். எப்போதாவது ஒருமுறை அவர்களை பார்க்க நானும் செல்வேன். தற்போது எழுந்துள்ள விவகாரத்தில் என்ன நடந்தது என எனக்கு முழுமையாக தெரியாது. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, இதை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், இருந்து காப்பாற்றுங்கள் என நான் தலையிடவும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

கட்சிகள் வலியுறுத்தல்: இதனிடையே இளம்பெண்ணை துன்புறுத்திய திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளை கைது செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தமிழகம் கட்சித் தலைவர் க.கிருஷ்ணசாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில நிர்வாகிகள் த.செல்லக்கண்ணு, கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

Loading

About Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *