சென்னை: மக்களவை தேர்தலுக்கு வெளிமாநிலங்களுக்கு பார்வையாளர்களாக செல்ல உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய இந்திய தலைமை தேர்தல் ஆணையர், அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கினார்.
ஒவவொரு தேர்தலின்போதும், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஒரு மாநிலத்தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் வேறு மாநிலத்தில் தேர்தல் பார்வையாளர்களாக செல்வது வழக்கம். இவர்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுப் பார்வையாளர்களாகவும், ஐபிஎஸ்அதிகாரிகள் பாதுகாப்பு தொடர்பான பார்வையாளர்களாகவும், ஐஆர்எஸ்அதிகாரிகள் செலவினம் தொடர்பானபார்வையாளர்களாகவும் நியமிக்கப்படுவார்கள்.
அந்த வகையில் இந்தாண்டும், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், ஆணையத்தின் அறிவுறுத்தல்படி ஒதுக்கப்பட்ட மாநிலங்களுக்கு சென்று தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.
இந்நிலையில், பார்வையாளர்களாக செல்லவுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கு நேற்று இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. காணொலி வாயிலாக இப்பயிற்சியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பங்கேற்றார்.
சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த பயிற்சிக் கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். முதலில் பங்கேற்ற அதிகாரிகளுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்திய தலைமை தேர்தல் ஆணையர், தொடர்ந்து, அவர்களுக்கான பணிகள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
குறிப்பாக வேட்பாளர்கள் செலவுகளை கண்காணிப்பது, பிரச்சாரங்களை கண்காணிப்பது, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, பணம், பரிசுப்பொருட்கள் விநியோகத்தை தடுப்பது, பணப்பரிமாற்றத்தை பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும் பல்வேறு அறிவுறுத்தல்களை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வழங்கியுள்ளார். இதுதவிர, பதற்றமான தொகுதிகளில் கூடுதலாக பார்வையாளர்களை நியமிப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.