சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் மே தினப் பூங்கா விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பதிவில்; நம்முடைய செபாக் டிரிப்ளிகேன் தொகுதிக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா மைதானம் அந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், இளையோரின் விளையாட்டு ஆர்வத்திற்கு பேருதவியாக இருக்கிறது.
அந்த மைதானத்தை மேம்படுத்தித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நவீன தரத்திலான கிரிக்கெட், குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டு கட்டமைப்புகள் – பசுமை சூழல் நிறைந்த நடைபயிற்சிக்கான அமைவுகள், யோகா பயிற்சி மையம் மற்றும் ஓய்விடங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதற்காக இன்று நடைபெற்ற விழாவில் பங்கேற்று, அடிக்கல் நாட்டினோம். மேம்பாட்டு பணிகள் நிறைவுற்று புதுப்பொலிவுடன் மைதானம் பயன்பாட்டிற்கு வரும்போது, நம்முடைய விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி நிச்சயம் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் என்பதில் மகிழ்ச்சி.
என்று பதிவிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சியின் பணிகள் குழு தலைவர் நே.சிற்றரசு, தேனாம்பேட்டை மண்டல குழு தலைவர் எஸ்.மதன்மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.