சென்னை: மலேசியா சுற்றுலாத் துறை சார்பில் பினாங் மாநிலத்துக்கு இந்திய சுற்றுலா பயணிகளையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையிலான சுற்றுலா கண்காட்சி ஜன.15 முதல் ஜன.22-ம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக பினாங் சுற்றுலா கண்காட்சி சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பினாங் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வாங் ஹான் வாய்,பினாங் வர்த்தக அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்வின்குணசேகரன், இயக்குநர் டேட்டின்பாரதி, மலேசியா சுற்றுலாத் துறைஇயக்குநர் ரஸாயிடி அப்துல் ரஹீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் செய்தியாளர்களிடம் பினாங் அமைச்சர் வாங் ஹான் வாய் கூறியதாவது: பினாங் மாநிலத்துக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைகடந்த ஆண்டை விட 7.2 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தொழில் துறையில் பெரியளவிலான வர்த்தக சந்திப்புகளை பெருக்குவதற்காக புதிதாக 8 ஆயிரம் சதுர அடியில் வர்த்தக மையம் பினாங் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மையம் வரும் 2025-ம்ஆண்டு திறக்கப்பட உள்ளது. அதேபோல சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக மலேசியா அரசின் சார்பில் 2023 டிச.1 முதல் 2024 டிச.31 வரை 30 நாட்களுக்கான இலவசவிசா வழங்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி தமிழகத்தில்இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக மதுரை, திருச்சியில் இருந்துமலேசியாவில் உள்ள கோலாலம்பூருக்கு விமானம் இயக்கவும், சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு கூடுதலாக விமானத்தை இயக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. பினாங் மாநிலத்துக்கு மற்ற நாடுகளில் இருந்து நேரடியாக 13 விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை, ஷாங்காய் (சீனா), துபாய் ஆகியநகரங்களில் இருந்தும் நேரடி விமானத்தை இயக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் இருந்து பினாங்குக்கு நேரடி விமானம் இயக்கப்படும் என்றார்.