சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்வதற்காக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் மேயர் பிரியா.
2024 – 25ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார் மேயர் பிரியா.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் நிர்பயா திட்டத்தில் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் மற்றும் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என்று மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்திருந்தார். இதன்படி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 14,650 மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலை பயிற்சி வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதே போல மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளை வண்டலூர் பூங்கா உள்ளிட்ட பல இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச்செல்ல ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவர்கள் இடையே கற்பனைத்திறன், படைப்பாற்றல், வாசிப்புத்திறன் ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் நூலகங்கள் அமைத்துள்ள பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
சென்னையில் உள்ள நடுநிலை, மேல்நிலை பள்ளிகளில் பாலின குழுக்கள் விரிவாக்கம் செய்ய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகையை அதிகரிக்கும் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.