சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் தடை செய்ததால், அவருக்கு மீண்டும் எம்.எல்.ஏ., பதவியை வழங்குவது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.நிருபர்களைச் சந்தித்த அப்பாவு கூறியதாவது: பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தடை விதித்து உள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பொன்முடி எம்.எல்.ஏ., பதவியில் நீடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை நான்தான் போட்டுள்ளேன்.வயநாடு எம்.பி., ராகுல், லட்சத்தீவு எம்.பி., முகமது பைசல், காசியாபாத் எம்.பி., அன்சாரி ஆகியோருக்கு இந்திய அரசியல் அமைப்புச்சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதேபோன்று பொன்முடி விவகாரத்திலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வந்துள்ளது. சட்டசபை செயலாளரிடம் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொண்டுள்ளோம். விரைவில் நடவடிக்கையை எதிர்பார்க்கலாம். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.