சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை அமித்ஷா வெளியிட்டுள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “1955 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவில் 2019 இல் மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற வகையில் சில திருத்தங்களை மத்திய பாஜக அரசு செய்தது. இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மதரீதியான இன்னல்களுக்கு உள்ளாகி, 2014 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பார்சிகள், பௌத்தர்கள், சீக்கியர்கள் உட்பட 6 மதங்களை சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் அரசியல் உள்நோக்கத்தோடு மதவாத அரசியலுக்கு தூபம் போடுகிற வகையில் முஸ்லிம் மதத்தினர் சேர்க்கப்படவில்லை. ஆனால், இந்த திட்ட திருத்தத்தின்படி அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த மேற்குறிப்பிட்ட மதங்களை சார்ந்தவர்கள் தங்களிடம் எந்த ஆவணமும் இல்லாதபோதிலும் இங்கு ஆறு ஆண்டுகள் தங்கியிருந்தாலே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் இஸ்லாமியர்களுக்கு இந்த வாய்ப்பு ஏன் மறுக்கப்படுகிறது ? ஏன் அவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என்கிற அடிப்படையில் தான் குடியுரிமை சட்ட திருத்தத்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.
எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையெல்லாம் மீறி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நாட்களே இருக்கிற நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமலுக்கு கொண்டு வந்தே தீருவேன் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிவந்த நிலையில் தற்போது அது நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதன்மூலம் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தி பாஜக ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு ஆளானார்கள்.
மற்ற மதங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் போது இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஏன் வழங்கக் கூடாது ? இஸ்லாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக ஏன் நடத்தப்படுகிறார்கள் என்ற கேள்விகள் எழுந்தன. இந்த போராட்டங்களின் போது நூற்றுக்கும் மேலான மக்கள் பலியாகினார்கள். இந்த எதிர்ப்பின் காரணமாக இந்த சட்டத்தை அமல்படுத்த ஒத்தி வைத்திருந்த மத்திய அரசு 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்த அமலாக்கம் என்பது அனைத்து குடிமக்களுக்கும் சமஉரிமை வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவை மீறும் செயலாகும். தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை அமித்ஷா வெளியிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் இதனை அமல்படுத்துவதன் மூலம் மேற்கு வங்கம், அஸ்சாம் போன்ற மாநிலங்களில் பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக எதிர்த்திருக்கிறார். இதன்மூலம் இஸ்லாமிய மதத்தவரையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சிக்கும் சிஏஏ சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருப்பதை வரவேற்கிறேன். கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் தமிழக சட்டமன்றத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்திட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
வருகிற மக்களவை தேர்தலில் கடுமையான தோல்வியை சந்திக்கிற அரசியல் சூழல் ஏற்பட்டதிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள இறுதியாக குடியுரிமை திருத்தச் சட்ட அஸ்திரத்தை பயன்படுத்த பாஜக முயற்சிக்கிறது. ஆனால், பாஜக.வின் முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது. பாஜகவின் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவையும், பாமகவையும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். வருகிற மக்களவை தேர்தலில் உரிய பாடத்தை புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.