சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளார் கே.பாலகிருஷ்ணன் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொகுதிப் பங்கீடு இறுதியானது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 29.2.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக நாடாளுமன்றத் தேர்தலில் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று (12.3.2024) தீர்மானிக்கப்பட்டது. தொகுதிகளின் விவரம்: 1.மதுரை 2. திண்டுக்கல்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கே.பாலகிருஷ்ணன், “தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது. கடந்த முறை மதுரை, கோவையில் போட்டியிட்டோம். இந்த முறை மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நாங்கள் கோவையை விட்டுக்கொடுத்தோம், திமுகவினர் திண்டுக்கல்லை விட்டுக் கொடுத்துள்ளனர். தேர்தலுக்கு முன்னால் சிஏஏவை அமல்படுத்தி மத்திய பாஜக மோசமான அரசியலை முன்னெடுத்துள்ளது” என்றார்.