சென்னை: தெலுங்கில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 12ம் தேதி வெளியாகிறது.
த்ரிவிக்ரம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதனால் அயலான், கேப்டன் மில்லர் படங்களுக்கு குண்டூர் காரம் சவால் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசரடிக்கும் குண்டூர் காரம் ட்ரெய்லர்
டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் த்ரி விக்ரம் இயக்கியுள்ள திரைப்படம் குண்டூர் காரம். மகேஷ் பாபுவுடன் மீனாட்சி செளத்ரி, ஸ்ரீ லீலா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். குண்டூர் காரம் வரும் 12ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டோலிவுட்டில் பக்கா கமர்சியல் படங்களில் நடித்து மாஸ் காட்டி வரும் மகேஷ் பாபு, விரைவில் ராஜமெளலி உடன் இணைகிறார். மகேஷ் பாபு – ராஜமெளலி இணையும் படத்தின் ஷூட்டிங் இந்தாண்டு தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரம் கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள SSMB 29, மகேஷ் பாபு கேரியரில் தரமான சம்பவமாக இருக்கும். அதற்கு முன்னதாக ஒரு கமர்சியல் ஹிட் கொடுக்க முடிவெடுத்திருந்தார் மகேஷ் பாபு.
அதன்படி அவரது ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவரான த்ரி விக்ரம் இயக்கியுள்ள குண்டூர் காரம் படத்தில் நடித்துள்ளார். அதிகம் எதிர்பார்ப்பில் உள்ள குண்டூர் காரம் ட்ரெய்லர் நேற்று வெளியானது. ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ள இந்த ட்ரெய்லரில், மகேஷ் பாபுவின் மாஸ் & க்ளாஸ் செம்மையாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அதேபோல், ஆக்ஷனிலும் மனுசன் அசரடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் டோலிவுட்டுக்கே உள்ளபடி ஃபேமிலி சென்டிமென்ட் ஜானரிலும் இந்தப் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்தாண்டு பொங்கலில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் மாஸ் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் படங்கள் வெளியாகின்றன. இந்தப் படங்கள் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் ரிலீஸால் அயலான், கேப்டன் மில்லர் படங்களுக்கு தெலுங்கில் அதிக ஸ்க்ரீன்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஹைதராபாத், பெங்களூர் நகரங்களில் குண்டூர் காரம் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் குண்டூர் காரம், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.