சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் அடுத்த ஆண்டு IPO வெளியிடுவதை தவிர்க்கும் வழிமுறைகளை ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், டாடா குழும பங்குகள் இன்று வேகமாக சரிந்து வருகிறது.
ரிசர்வ் வங்கி (RBI) விதிமுறைகளின்படி பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதைத் தவிர்க்க டாடா சன்ஸ் தனது கடன் அமைப்பை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் டாடா குழும முதலீட்டாளர்கள் கடந்த 2 வாரத்தில் கிடைத்த லாபத்தை பணமாக்கிக்கொள்ள இன்று அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.
ரிசர்வ் வங்கி ஏன் IPO-வை கட்டாயமாக்குகிறது?: டாடா சன்ஸ் ஒரு முதன்மை முதலீட்டு நிறுவனமாக (CIC) பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஆர்பிஐ செப்டம்பர் 2022ல் வெளியிட்ட விதிமுறைக்கு இணங்க NBFC நிறுவனத்தின் உயர்மட்ட நிறுவனம் 3 வருடத்தில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு முக்கியமான காரணம் NBFC நிறுவனத்தின் நிதி பரிமாற்றத்தை கூர்ந்து கவனிக்கவும், சந்தை விதிமுறைக்குள் உட்படுத்தப்படுவதால் பாதுகாப்பு பிரச்சனைகள் இருக்காது என அறிவுறுத்தியுள்ளது. டாடா சன்ஸ் முடிவு: ஆர்பிஐ விதிகளின் கீழ் கட்டாய ஐ.பி.ஓ-வை தவிர்க்க, டாடா சன்ஸ் தனது கடன் அமைப்பை சரிசெய்து கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனம் தனது கடனை மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றுவதையோ அல்லது கடனற்ற நிறுவனமாக மாற்றுவதையோ நோக்கமாகக் கொண்டுள்ளது.
டாடா-வின் ஐடியா: டாடா சன்ஸ் நிறுவனத்தின் மொத்த கடன் தொகை 2023 நிதியாண்டின் நிலவரப்படி ரூ.20,000 கோடி ஆகும். இதன் மூலம் டாடா சன்ஸ் தனது கடன்களை 100 கோடி ரூபாய்க்கும் கீழ் கொண்டு வர இலக்கு நிர்ணயம் செய்துள்ளது, இதனால் டாடா சன்ஸ் பங்குச்சந்தைக்கு வர வேண்டிய கட்டாயம் இருக்காது.
பங்கு இருப்பு: டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா கெமிக்கல்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் தலா 3 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றன. டாடா பவர் மற்றும் இந்தியன் ஹோட்டல்ஸ் உள்ளிட்ட குழுமத்தின் பிற பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் முறையே 2 சதவீதம் மற்றும் 1 சதவீதம் பங்குகளை வைத்திருக்கின்றன. டாடா சன்ஸ் IPO எப்படி டாடா கெமிக்கல்ஸுக்கு லாபம்?: டாடா சன்ஸ் பங்கு வெளியீடு நிறுவனத்தின் மதிப்பை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா கெமிக்கல்ஸ் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு ரூ.19,850 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதால், இந்த நிறுவனத்தின் மதிப்பு அதிகரிக்கும்.
டாடா சன்ஸ் ஐபிஓ செய்வது மூலம் பங்கு முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் மேல் வைத்திருக்கும் மதிப்பை மேம்படுத்தும் என்றும், சிக்கலான குழுமத்தின் பங்கு வைப்பு கட்டமைப்பை எளிமைப்படுத்தும் என்றும் நம்பிக்கை எழுந்தது. இதனால் கடந்த வாரம் டாடா கெமிக்கல்ஸ், டாடா எல்க்ஸி, ராலீஸ் இந்தியா, டாடா பவர், நெல்கோ, டாடா டெலிசர்வீசஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட டாடா குழும பங்குகள் அதிகப்படியாக 36 சதவீதம் வரை உயர்ந்தன.
இதில் முக்கியமாக கடந்த இரண்டு நாட்களில், டாடா கெமிக்கல்ஸ் பங்கின் விலை 27 சதவீதம் உயர்ந்தது, கடந்த ஆறு வர்த்தக நாட்களில் இது 44 சதவீதம் வரை உயர்ந்தது. என். சந்திரசேகரன் தலைமையிலான நிறுவனம் அதன் கடனை தனி நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதால் இன்று பல பங்குகள் சரிவில் உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் டாடா குழும பங்குகளின் நிலவரம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் – 4126.5 (+0.4%) ரூபாய் டாடா ஸ்டீல் – 153.8 (-2.19%) ரூபாய் டாடா மோட்டார்ஸ் – 1028.15 (-1.08%) ரூபாய் டைட்டன் கம்பெனி – 3748.0 (-1.04%) ரூபாய் டாடா கெமிக்கல்ஸ் – 1194.6 (-9.15%) ரூபாய் டாடா பவர் கம்பெனி – 414.6 (-2.44%) ரூபாய் தி இந்தியன் ஹோட்டல் கம்பெனி – 571.9 (-2.67%) ரூபாய் டாடா நுகர்வோர் தயாரிப்புகள் – 1222.55 (-3.05%) ரூபாய் டாடா கம்யூனிகேஷன்ஸ் – 1973.7 (-1.84%) ரூபாய் வோல்டாஸ் – 1075.75 (-0.61%) ரூபாய் ட்ரெண்ட் – 4011.0 (1.51%) ரூபாய் டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் – 9257.2 (-5%) ரூபாய் டாடா மெட்டாலிக்ஸ் – 1111.05 (0%) ரூபாய் டாடா எல்க்ஸி – 7686.8 (-0.04%) ரூபாய் நெல்கோ – 781.0 (-3.72%) ரூபாய் டாடா காபி – 344.8 (0%) ரூபாய் டாடா டெக்னாலஜிஸ் – 1089.8 (-3.35%) ரூபாய்