ஐந்தாவது டெஸ்டில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் அபார பந்துவீச்சில் சிக்கிய இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்திய அஸ்வின், 2வது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தினார்.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஐந்தாவது டெஸ்ட் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 218 ரன்கள் எடுத்தது. நேற்று (மார்ச் 08) இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 473 ரன் எடுத்து இருந்தது.
ஆண்டர்சன் சாதனை3வது நாள் ஆட்டம் இன்று துவங்கிய சிறிது நேரத்தில் இந்திய அணி கூடுதலாக 4 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 477 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் சோயப் பஷீர் 5, ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இந்த போட்டியில் ஆண்டர்சன் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற பெருமை பெற்றார்.
இந்திய அணி 259 ரன்கள் முன்னிலை பெற்றது.அஸ்வின் அபாரம்இதனையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ஆனால், அந்த அணி வீரர்களுக்கு இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தொல்லை கொடுத்தார். அவரது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கிராவ்லே ரன் எடுக்காமலும், டக்கட் 2 , போப் 19, கேப்டன் ஸ்டோக்ஸ் 2, போக்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஜோ ரூட் 84, பெயிர்ஸ்டவ் 39, ஹார்ட்லே 20 ரன் எடுத்தனர். பஷீர் 13, பெயிர்ஸ்டவ் 39, ஹார்ட்லே 20, உட் 0 ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 195 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வின் 5, பும்ரா, குல்தீப் தலா 2, ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.