சென்னை: காற்றாலை சீசன் நிறைவடைந்த நிலையிலும், காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால், 1,190 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, உடுமலை, தேனி, பல்லடம் ஆகிய மாவட்டங்களில் 8,894 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட 11,800 காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் மின்சார உற்பத்தி ஜுலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும்.
இந்த காலகட்டத்தில் சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தினசரி உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். அக்டோபர் மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்கி விடும் என்பதால் எதிர்பார்த்த அளவு காற்றின் வேகம் அதிகமாக இருக்காது. இதனால், காற்றாலை மின்னுற்பத்தி குறையும்.
இந்நிலையில், காற்றாலை சீசன் முடிந்த நிலையில் சில பகுதிகளில் காற்றின் வேகம் குறையாமல் இருப்பதால் காற்றாலை மூலம் 1,190 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
தமிழகத்தில், சூரியசக்தி மூலம் 7,134 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. இதில், 4,314 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் மின்னுற்பத்தி செய்யப்படுவதால், அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி 2,400 மெகாவாட் அளவாகக் குறைக்கப்பட்டுள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.