சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட 5 தென்மாநிலங்களில் வெல்லப்போவது யார்? என்பது பற்றி டைம்ஸ் நவ் மேற்கொண்ட சர்வேயின் பரபரப்பான முடிவு தற்போது வெளியாகி உள்ளன. இதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரிய ஷாக் கிடைத்துள்ளது. மாநிலம் வாரியாக அதன் விபரம் வருமாறு:
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்காவிட்டாலும் கூட கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன.
பாஜகவை பொறுத்தமட்டில் வடமாநிலங்களில் மிகவும் பலமாக உள்ளது. ஆனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை. மாறாக கர்நாடகாவில் மட்டும் பாஜகவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதற்கிடையே தென்மாநிலங்களில் வரும் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் பாஜக ‛ஆபரேஷன் சவுத்’ என்பதன் மூலம் ஓராண்டுக்கு முன்பாகவே பணியை தொடங்கியது. தென்மாநிலங்களுக்கு பாஜக முக்கியத்துவம் அளித்து சில முக்கிய அறிவிப்புகளையும் அறிவித்தது. இந்த அறிவிப்புகள் என்பது வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கைக்கொடுக்கும் என பாஜக நம்புகிறது.
இத்தகைய சூழலில் தான் நாடாளுமன்ற தேர்தலையொட்டி டைம்ஸ் நவ் – இடிஜி ரீசர்ஜ் அமைப்பு சார்பில் இந்தியா முழுவதும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 357 பேரிடம் சர்வே நடத்தப்பட்டது. இதில் 85 சதவீதம் பேரிடம் நேரிலும், 15 சதவீதம் பேரிடம் போன் மூலமாக பேசியும் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வே ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் 5 தென்மாநிலங்களில் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு இடம் கிடைக்கும்? என்பது பற்றிய விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்மாநிலங்களை பொறுத்தமட்டில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை விட ‛இந்தியா’ கூட்டணிக்கு தான் அதிக இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு: மேலும் தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் அமைந்துள்ள ‛இந்தியா’ கூட்டணி குறைந்தபட்சம் 29 முதல் அதிகபட்சமாக 35 இடங்களில் வெல்லும். பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 2 முதல் 6 தொகுதிகளில் வெல்லும். அதிமுக தலைமையிலான கூட்டணி 1 முதல் 3 இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டணியை தவிர்த்த மற்றவர்கள் 0-2 தொகுதி வரை வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா: கேரளாவை பொறுத்தமட்டில் மொத்தம் 20 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் இந்தியா கூட்டணி 18 முதல் 20 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 0-1 தொகுதி வரை கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா: தெலுங்கானாவில் மொத்தம் 17 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 4 முதல் 6 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி 2 முதல் 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான ‛இந்தியா’ கூட்டணி 8 முதல் 10 தொகுதிகளிலும் வெல்லும் எனவும், மற்றவர்கள் 0- 1 தொகுதியை கைப்பற்றுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா: கர்நாடகாவை பொறுத்தமட்டில் 28 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக + ஜேடிஎஸ் கட்சிகள் இணைந்த என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 22 முதல் 24 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 4- 6 தொகுதியிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா: ஆந்திராவில் மொத்தம் 25 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் முதல் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 21 முதல் 22 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு – நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சிகளின் கூட்டணி 3-4 தொகுதிகளை கைப்பற்றலாம் எனவும், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடங்கள் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சந்திரபாபு நாயுடு – நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனாவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.