சென்னை: சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமி, விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடலுக்கு செவ்வாய்க்கிழமை (பிப்.13) பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், தொடர்ந்து கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக மனிதநேய அறக்கட்டளை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் மனிதநேய கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு சைதை துரைசாமி அவர்களின் மகன் மனிதநேய அறக்கட்டளையின் இயக்குனர் வெற்றி துரைசாமி அவர்கள் பிப்.04-ம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னுர் மாவட்டத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது வாகனம் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
மத்திய, மாநில அரசின் தொடர் முயற்சியால் எட்டு நாட்களுக்கு பிறகு அவரது உடல் சட்லஜ் நதியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
அன்னாரது பூத உடல் பிப்.13 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு, இறுதிச்சடங்கு மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை (தி. நகர்) மயானபூமியில் தகனம் செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.