சென்னை: உலகின் டாப் செமிகண்டக்டர் நிறுவனமான குவால்காம் நிறுவனம் சென்னையில் தனது புதிய ஆராய்ச்சி மையத்தை ஆரம்பிக்க உள்ளது. இதில் அவர்கள் பல கோடியை முதலீடும் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
நமது மாநிலத்தின் பொருளாதாரத்தை அதிகரிக்கவும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க கடந்த ஜன. மாதம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
பொதுவாகச் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியே முதலீடுகள் வருவதாகப் புகார் இருந்தன. அதைச் சரி செய்யும் வகையில் இந்த முறை மாநிலம் முழுக்க முதலீடுகள் பெறப்பட்டது. குறிப்பாகத் தென்மாவட்டங்களில் கணிசமான முதலீடுகள் இருந்தன. சர்வதேச முதலீடுகள்: அதேபோல சென்னையிலும் வழக்கம் போலப் பல முதலீடுகள் இருந்தன. முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் வெறும் ஒப்பந்தமாக மட்டும் இல்லாமல், அவை முதலீடாக மாறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே செமிகண்டக்டர் நிறுவனமான குவால்காம் தனது புதிய வடிவமைப்பு மையத்தைச் சென்னையில் உள்ள ராமானுஜன் ஐடி சிட்டியில் திறக்கிறது.. வரும் 14ஆம் தேதி இந்த வடிவமைப்பு மையம் திறக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் நடந்த தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் இத்திட்டம் குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில், அதை குவால்காம் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ்டியானோ அமோன் அடுத்த வாரம் திறந்து வைக்கிறார். இதன் மூலம் சுமார் 1,600 பேருக்கு நேரடியாக வேலை கிடைக்கும். மறைமுகமாகப் பல ஆயிரம் பேர் வேலையைப் பெறுவார்கள். இந்த புதிய வடிவமைப்பு மையத்தில் சுமார் ₹177 கோடி முதலீடு செய்வதாக குவால்காம் அறிவித்துள்ளது.
குவால்காம்: சர்வதேச அளவில் முக்கியமான டெக் சார்ந்த நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் குவால்காம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனமாகும்.. இவர்கள் செமிகண்டக்டர், மென்பொருள், டெலிகாம் உபகரணங்கள் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இவர்களின் வயர்லெஸ் தொழில்நுட்பங்கள் ரொம்பவே மேம்பட்டது. மேலும், இவர்களின் ஸ்னாப்டிராகன் வரிசை பிராசசர்கள் மொபைல் நிறுவனங்கள் மத்தியில் ரொம்பவே புகழ்பெற்றவையாகும்.
3ஜி, 4ஜி, 5ஜி என இவர்கள் உருவாக்கிய பல தொழில்நுட்பங்கள் மொபைலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் மற்றும் கம்ப்யூட்டிங் போன்ற பிற தொழில்களிலும் கூட இவர்களுக்கு நல்ல இடம் இருக்கிறது. ஆர் அன்ட் டி மையம்: சென்னையில் அமையும் இந்த டிசைன் மையம் வயர்லெஸ் மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும். உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் குவால்காம் நிறுவனம் தனது ஆய்வு மையங்களை பெரும்பாலும் அமெரிக்காவில் தான் அமைத்துக் கொள்ளும். அமெரிக்காவுக்கு வெளியே இந்தியாவில் தான் குவால்காம் நிறுவனத்திற்கு அதிகபட்ச ஆராய்ச்சி சென்டர்கள் உள்ளன.
குவால்காம் நிறுவனத்திற்கு ஏற்கனவே பெங்களூர், சென்னை, ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் ஆராய்ச்சி மையங்கள் இருக்கிறது. மேலும் தற்போது நாட்டில் சுமார் 17,000 பேர் குவால்காம் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் சென்னையில் மற்றொரு ஆராய்ச்சி மையத்தை குவால்காம் நிறுவனம் ஆரம்பிக்கிறது. இந்த நிகழ்வில் பல முக்கிய நபர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.