- 36m
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடர்ந்து ஐந்தாவது முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிப்பெற்றிருக்கிறது.
அரையிறுதியில் இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்கா கடும் சிரமத்தை அளித்தது. ஆனாலும் சவால்கள் அத்தனையையும் சமாளித்து இந்தியா வென்றிருக்கிறது. காரணம், உதய் மற்றும் சச்சின் தாஸ் எனும் இரண்டு இளைஞர்கள்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சஞ்சய் தாஸூக்கு கிரிக்கெட்டின் மீது கொள்ளைப் பிரியம். அவரே ஒரு கிரிக்கெட் வீரரும் கூட. பல்கலைக்கழக அளவில் கிரிக்கெட்டும் ஆடியிருக்கிறார். ஆனாலும் அதற்கு மேல் அவரால் கிரிக்கெட்டில் நீடிக்க முடியவில்லை. சஞ்சய்க்குத் திருமணம் நடக்கிறது. சஞ்சய்யின் மனைவி சுரேகா கர்ப்பம் தரிக்கிறார். பிறப்பது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும். அந்த குழந்தைக்கு சச்சின் எனப் பெயர் வைக்க வேண்டும். தனது குழந்தை இவ்வுலகின் முதல் ஒளிக்கீற்றை காணும் முன்பாகவே சஞ்சய் தாஸ் இவ்வாறு முடிவு செய்துவிட்டார்.Sachin Dhas
சஞ்சய் நினைத்ததைப் போலவே ஆண் குழந்தை பிறக்கிறது. அவனுக்கு சச்சின் தாஸ் எனப் பெயர் சூட்டுகிறார். நான்கரை வயதிலேயே கையில் பேட்டைக் கொடுத்து கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்பி வைக்கிறார். அந்த சச்சின் தாஸ்தான் வளர்ந்து வந்து இப்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடி உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியை அழைத்துச் சென்றிருக்கிறார்.சச்சின் தாஸின் ஆட்டத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு அவரின் பக்குவம் மற்றும் நிதானம் குறித்து பார்த்துவிடுவோம். ஏனெனில், அதைப் பார்த்தாலே சச்சினின் மாபெரும் இன்னிங்ஸூக்கான அடிநாதம் என்னவென்று புரிந்துவிடும்.
பத்திரிகையாளர் சந்திப்புகள் பல வீரர்களுக்கும் பதற்றத்தைக் கொடுக்கக்கூடியது. ஆனால், அந்த 19 வயது இளம் வீரனான சச்சினுக்கு அப்படியில்லை.
ஆங்கிலம் அத்தனை சரளமாக வராது என்பதால் பேசுவதை மொழிப்பெயர்த்து ஆங்கிலத்தில் சொல்ல, கூடவே துணைக்கு ஒரு நபரையும் அழைத்து வருகிறார். ஆனாலும் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அந்த இளைஞனிடம் துளி கூட பதற்றமில்லை. ‘உங்களுக்குப் பதிலாக உதய்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருக்கிறதே?’ எனும் பொருள் தொனிக்கும் வகையில் ஒரு கேள்வி. உதய் அணியின் கேப்டன். அவரைப் பற்றி இப்படி ஒரு சிக்கலான கேள்வி. சச்சினிடம் எந்த சலனமும் இல்லை. “உதய் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடியிருந்தார். இந்தப் போட்டியிலும் பொறுப்பை உணர்ந்து நின்று ஆடினார். அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன்” என மென்சிரிப்பை உதிர்த்தார்.Sachin Dhas
இறுதிப்போட்டிக்கு முன்பாக நடைபெறும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை இவ்வளவு இலகுவாக, நேர்த்தியாகக் கையாளும் ஒரு வீரரின் மனப்பக்குவம் எப்படியானதாக இருக்கும் என நினைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பக்குவம்தான் இந்திய அணி 32-4 என வீழ்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸை சச்சின் தாஸை ஆட வைத்தது. கேப்டன் உதய்யுடன் இணைந்து 171 ரன்களுக்கு சச்சின் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். நடப்பு உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் வைத்து நடைபெறுகிறது. உள்ளூரில் போட்டிகள் நடைபெறுவதால் தென்னாப்பிரிக்க அணி ரொம்பவே சௌகரியமாக ஆடி வந்தது. அவர்களின் வேகப்பந்து வீச்சு படையும் ஒவ்வொரு போட்டியிலும் தங்களது பணியைத் திறம்படச் செய்து வந்தனர்.
நடப்பு உலகக்கோப்பையில் ஆபத்தான பந்துவீச்சைக் கொண்டிருந்தது தென்னாப்பிரிக்காதான். இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி இதற்கு முன் ஆடிய 5 போட்டிகளில் எதிரணியின் 39 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டும் தோற்றிருந்தார்கள். அந்தப் போட்டியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் 4 போட்டிகளில் எதிரணியின் 40 விக்கெட்டுகளில் 37 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
பெரும்பாலான விக்கெட்டுக்களை வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தியிருந்தனர். குறிப்பாக, க்வீனா மாபாகா எனும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மட்டும் 5 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த அரையிறுதிப் போட்டியிலும் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே இந்திய அணியின் ஓப்பனரான ஆதர்ஷ் சிங்கின் விக்கெட்டை எடுத்து இந்தியாவின் தடுமாற்றத்தைத் தொடங்கி வைத்திருந்தார்.
32-4 என்பது ஒரு அணியை மனரீதியாக ஒடுங்க வைக்கும் வகையிலான சூழல். உதய்யும் சச்சினும் அப்படியொரு சமயத்தில்தான் கூட்டணி அமைத்தனர். போட்டியை எவ்வளவு நேரம் இழுத்து கடைசி ஓவர் வரை இழுத்து செல்கிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டனர். மேலும், நேபாளத்திற்கு எதிரான கடந்த போட்டியில்தான் இருவரும் இணைந்து 200+ ரன்களுக்கு பார்டனர்ஷிப் அமைத்திருந்தனர். சச்சின் சதம் அடித்திருந்தார். இந்தப் போட்டியில் அதே அளவுக்கான வீரியத்துடனான பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டிய நெருக்கடி. இருவரும் ஒருவரை ஒருவர் காம்ப்ளீமெண்ட் செய்து நல்ல பக்குவத்துடன் இன்னிங்ஸைக் கட்டமைத்தனர். சச்சின் கொஞ்சம் வேகமாக ஷாட்களை ஆடி Run a Ball-இல் ரன்சேர்க்க, உதய் நின்று மறுபுறத்தில் விக்கெட் ஏதும் விழாமல் பார்த்துக்கொண்டார்.Sachin Dhas
இந்தப் பக்குவமான அணுகுமுறையிலிருந்து ஆட்டத்தின் எந்த நொடியிலும் தவறவில்லை. இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட இரண்டிலிருந்து இரண்டரை மணி நேரம் வரை பேட்டிங் செய்திருந்தனர். எங்கேயுமே அந்த வயதிற்குரிய முதிர்ச்சியற்றத்தன்மை வெளிப்படவே இல்லை. போட்டியை இந்தியா பக்கமாக மாற்றிவிட்டுதான் இருவரும் ஆட்டமிழந்தனர். 95 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 96 ரன்களை எடுத்திருந்த சச்சின் சதத்தைத் தவறவிட்டதுதான் ஒரு நிறைவைக் கொடுக்காமல் போனது. ஆனால், பொதுவாக பார்த்தோமானால் உலகக்கோப்பையின் அதிமுக்கிய ஆட்டத்தை இருவரும் ஆடியிருந்தனர்.நன்றாக ஆடும் தென்னாப்பிரிக்காவை யாரும் எதிர்பார்க்காத ஓர் அசாத்திய சம்பவம் நிகழ்ந்து காலி செய்துவிடுவது வழக்கம். இந்த முறை அவர்களுக்கு அப்படி ஒரு வரலாற்று சம்பவமாக அமைந்தது சச்சினும் உதய்யும்தான்!