சென்னை: “தேவநேயப் பாவாணரின் தமிழ்த்தொண்டைப் போற்றி, தமிழ் காக்கும் கடமையில் உறுதியோடு நிற்க உரம் பெறுவோம்” என தேவநேயப் பாவாணரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர், சொல் ஆராய்ச்சி வல்லுநர், பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 7). தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராக கருதப்படுபவர். அவருடைய பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வகையில், தேவநேயப் பாவாணரின் பிறந்தநாளையொட்டி தமிழக மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “நாம் செல்லும் தமிழ்வழிப் பயணத்துக்கு ஊக்கமளித்திட்ட திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணரின் பிறந்தநாள் இன்று. ஆழமான தமிழறிவும் அசைக்க முடியாத இன உணர்வும் கொண்ட தமிழ்ச்சீயம் பாவாணர் எனத் தலைவர் கலைஞர் அவரது புகழ் பாடினார். பாவாணரின் தமிழ்த்தொண்டைப் போற்றி, தமிழ் காக்கும் கடமையில் உறுதியோடு நிற்க உரம் பெறுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.