சென்னை: பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட்டின் பிஎஸ்-4 இயந்திரத்தில் அனுப்பப்பட்டிருந்த கருவிகள் திட்டமிட்டபடி ஆய்வு பணிகளை மேற்கொள்வதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் அம்சங்களை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இது பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட் மூலம் கடந்த ஜனவரி 1-ம் தேதி பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து வெளியாகும் கதிரியக்கம், விண்மீன் வெடிப்பு உள்ளிட்டவை குறித்து இந்த செயற்கைக் கோள் 5 ஆண்டுகள் ஆய்வு செய்ய உள்ளது.
இதுதவிர, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ்-4 இயந்திரத்தில் போயம் (POEM – PSLV Orbital Experimental Module) எனும் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதாவது, செயற்கைக் கோளை நிலைநிறுத்திய பிறகு, பிஎஸ்-4 இயந்திரம் 350 கி.மீ. உயரத்துக்கு கீழே கொண்டுவரப்பட்டு ஆய்வு பணிகள் நடத்தப்பட்டன. இதற்காக அந்த இயந்திரத்தில் இந்திய ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் தயாரித்த 9 சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அந்த கருவிகள் அனைத்தும் வெற்றிகரமாக ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:
எக்ஸ்போசாட் செயற்கைக் கோளை நிலைநிறுத்திய பிறகு, பிஎஸ்-4 இயந்திரம் புவியின் குறைந்த தாழ்வட்டப் பாதைக்கு கொண்டு வரப்பட்டது. 23 நாட்களில் 400 முறை அந்த கலன் குறிப்பிட்ட தாழ்வட்டப் பாதையை சுற்றி வந்துள்ளது. அதில் உள்ள அனைத்து கருவிகளும் திட்டமிட்டபடி இயங்கி வருவதுடன் பல்வேறு தரவுகளையும் அளித்து வருகின்றன.
இந்த பணிகள் அடுத்த 73 நாட்கள் தொடரும். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு ஆய்வு திட்டங்களுக்கு இந்த தரவுகளும், போயம்-3 மூலம் அனுப்பப்பட்ட ஆய்வு கருவிகளின் செயல்பாடுகளும் உறுதுணையாக இருக்கும். 3 மாதங்களுக்கு பிறகு பிஎஸ்-4 இயந்திரம் மீண்டும் புவியின் வளிமண்டல பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்படும். இதன்மூலம் விண்வெளி கழிவுகள் எதுவும் இல்லாத திட்டமாக பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட் ஏவுதல் அமையும். இதுவரை 3 முறை போயம் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு 21 கருவிகள் அனுப்பப்பட்டன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பிஎஸ்-4 இயந்திரத்தில் இருந்த எப்சிபிஎஸ் கருவி மூலம் விண்வெளியில் மின்சாரம் தயாரிப்பு சோதனை வெற்றிகரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.