சென்னை : குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்திட வேண்டும் என்ற கலைஞரின் கனவு நனவாகியுள்ளது என தூத்துக்குடி திமுக எம்.பி.
கனிமொழி பெருமிதம் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த திமுக எம்.பி.கனிமொழி, “நாட்டின் 2வது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என 2013ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கலைஞர் கடிதம் எழுதியிருந்தார். தொடர் கடிதங்கள், நாடாளுமன்றத்தில் கோரிக்கை, துறைசார் அமைச்சர்கள், அதிகாரிகள் சந்திப்பு என ராக்கெட் ஏவுதளம் அமைத்திட திமுக விடாமுயற்சி மேற்கொண்டது. கலைஞர் கடிதத்தை குறிப்பிட்டு ஏவுதளம் வேண்டுமென மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தேன். 2014 ஜூலை பாஜக ஆட்சியமைத்து முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏவுதளம் வேண்டுமென வலியுறுத்தினேன்.
2018- குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு பிரதமருக்கு கடிதம் எழுதினேன். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டதால் மங்கள்யான் செயற்கை கோள் 1350 கிலோ எடையுள்ள சாதனங்களையே கொண்டு செல்ல முடிந்தது. குலசேகரன்பட்டினத்தில் இருந்து மங்கள்யான் செயற்கைகோள் ஏவப்பட்டிருந்தால் 1800 கிலோ எடையுள்ள சாதனங்களை கொண்டு சென்றிருக்க முடியும். 2019 ஏப்ரல் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியாக அளித்தேன். 2019-ம் ஆண்டு மக்களவையில் மீண்டும் கோரிக்கை வைத்தேன். 2023 ஆகஸ்டில் ஏவுதளம் அமைத்திட ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. திமுகவின் 10 ஆண்டுகால விடாமுயற்சியால் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது,”இவ்வாறு பேசினார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக கூறிய பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்தார். தமிழ்நாட்டு மோடி அரசு என்ன திட்டங்களை கொண்டு வந்தது என்றும் மாநில அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி கொள்வது பாஜக தான் என்றும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.