பஞ்சம் பிழைக்க ஊர் ஊராக திரிவதை, பராரியாக திரிவது என்பார்கள். அப்படி வாழ்க்கைக்காக அலைந்து திரிகிறவர்களை குறிக்கும் சொல் பராரி. இந்தத் தலைப்பே விளிம்புநிலை மனிதர்கள் குறித்து பேசும் படைப்பு இது என்பதை சொல்லிவிடுகிறது.
ராஜு முருகனின் எழுத்திலும், திரை ஆக்கங்களிலும் சமூகம் மீதான அக்கறை வெளிப்படும். அவர் தயாரித்திருக்கும் பராரி திரைப்படமும் சமூக அரசியலை பேசும் திரைப்படமாக உருவாகியிருக்கிறது.
பஞ்சம் பிழைக்க ஊர் ஊராக திரிவதை, பராரியாக திரிவது என்பார்கள். அப்படி வாழ்க்கைக்காக அலைந்து திரிகிறவர்களை குறிக்கும் சொல் பராரி. இந்தத் தலைப்பே விளிம்புநிலை மனிதர்கள் குறித்து பேசும் படைப்பு இது என்பதை சொல்லிவிடுகிறது.
ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி படத்தை எழுதி, இயக்கியுள்ளார். படத்தின் நாயகனாக ஹரிசங்கர் நடித்துள்ளார். அவரைத் தவிர்த்து நாயகி சங்கீதா கல்யாண் உள்பட பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். அதனால், ஆறு மாதங்கள் முறையான நடிப்புப் பயிற்சி அளித்து அதன் பிறகு படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். ராஜு முருகன் எஸ்பி சினிமாஸுடன் இணைந்து பராரியை தயாரித்துள்ளார்.
இசைக்கு ஷான் ரோல்டன், ஒளிப்பதிவுக்கு ஸ்ரீதர், படத்தொகுப்புக்கு சாம் ஆர்டி.எக்ஸ், கலைக்கு ஏ.ஆர்.சுகுமாரன் என்று திறமையான தொழில்நுட்பக்கலைஞர்கள் பங்களிப்பு செய்துள்ளனர். திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் வசிக்கும் மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக பராரி உருவாகியுள்ளது. சாதி, மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகளையும், அதன் பின்னாலுள்ள அரசியலையும் வெளிச்சமிட்டு காட்டுவதுடன், அத்தகையவர்களை நோக்கி அறத்தோடு இப்படம் கேள்வி எழுப்புகிறது.
இரு தினங்களுக்கு முன் லோகேஷ் கனகராஜ் பராரியின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். நாயகன், நாயகி இருவரது உடைகளும் கிழிக்கப்பட்டு, அரைநிர்வாணமாக, ரத்தக்காயங்களுடன் கைகள் கட்டப்பட்டு அமர்ந்திருக்க, ஊர்மக்கள் சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கும் முதல் காட்சி போஸ்டரே மனதை உலுக்குவதாக இருந்தது. 45 தினங்களில் மொத்த படப்பிடிப்பும் முடிக்கப்பட்ட பராரி விரைவில் திரைக்கு வரவுள்ளது.