சென்னை: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில், பணியிட பாதுகாப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு தின உறுதிமொழி நேற்று ஏற்கப்பட்டது.
தொழிற்சாலைகளில் பணியிடப் பாதுகாப்பை ஏற்படுத்தவும், தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும், விபத்துகளைத் தடுக்கும் நோக்கிலும் 53-வது தேசிய பாதுகாப்பு தினம் சென்னையில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு, ‘பாதுகாப்புத் தலைமையை மையப்படுத்தி சுற்றுச்சூழல் சமூக நிர்வாகத்தில் சிறப்படைவோம்’ என்ற கருப்பொருளைக் கொண்டு அனுசரிக்கப்படுகிறது.
பட்டிமன்றம், கருத்தரங்கம்: இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் மு.வே.செந்தில்குமார், இத்துறை அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுமத்தின் தமிழ்நாடு பிரிவு செயலாளர் ராஜ்மோகன் பழனிவேலு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.
மேலும், தேசிய பாதுகாப்பு தினத்தை சிறப்பிக்கும் விதமாக பாதுகாப்பு வாரம் மற்றும் பாதுகாப்பு மாதமாக கொண்டாடப்பட உள்ளது. பாதுகாப்புடன் பணிபுரிவதை எடுத்துரைக்கும் வகையில் விநாடி-வினா, பட்டிமன்றம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட உள்ளன.
உழைப்பாளர் விருது: மேலும், விபத்துகளைக் குறைத்து சிறப்பாக செயல்படும் தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பு விருதுகளும், தொழிற்சாலையின் பாதுகாப்பு மற்றும்உற்பத்தி திறன் மேம்பாடுகுறித்து சீரிய ஆலோசனைகளை வழங்கும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாகஉயர்ந்த உழைப்பாளர் விருதுகளும் வழங்கப்பட உள்ளன.