சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் தமிழக வளர்ச்சிக்காக ரூ.16 லட்சம் கோடிதிட்டங்களை கொண்டு வந்திருப்பதாகவும் இந்திய அரசியலை மாற்றியவர் என்றும் பிரதமர் மோடி குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோர் தெரிவித்தனர்.
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்ற பாஜகபொதுக்கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:
பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ, அப்போதெல்லாம் தமிழகத்துக்கான புதிய திட்டங்களையும் சேர்த்து கொண்டு வருகிறார். அந்தவகையில் இன்றைக்கு கல்பாக்கத்தில் 500 மெகாவாட் ஈனுலை அமைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். இதேபோல கடந்த வாரம் தூத்துக்குடியில் ரூ.17,500 கோடி மதிப்பிலான திட்டத்தையும், அதற்கு முன்னாள் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தையும் அறிவித்தார்.
இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே தமிழக வளர்ச்சிக்காக ரூ.16 லட்சம் கோடியில் புதிய திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். தமிழ் பாரம்பரியத்தையும், தமிழ் மொழியின் பெருமையையும் உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பிரதமர் மோடியை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் சார்பாகவும் வரவேற்கிறேன். இவ்வாறு பேசினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தன்னுடைய வாழ்க்கை முழுவதுமே மக்களின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்திருக்கும் மோடியின் குடும்பம் நாம் தான்.142 கோடி மக்களும் அவரதுகுடும்பத்தினர்தான்.
இந்த மக்களவைத் தேர்தலில் வென்று மோடி பிரதமராக அமரும்போது தமிழகத்தில் இருந்து 39 எம்.பி.க்களை நாம் அனுப்பி வைக்க வேண்டும். இந்திய அரசியலை அடிப்படையில் இருந்து பிரதமர் மோடி மாற்றியிருக்கிறார்.
பாஞ்சாலி சபதத்தில் மகாகவி பாரதியார், “பேய் அரசு ஆண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பேய் ஆட்சி செய்தால் அந்த நாடு எப்படி இருக்குமோ, அதேபோல இன்றைக்கு தமிழகத்தில் திமுகவின் ஆட்சி ஒரு சாட்சி. மண் கடத்தல், சாராயம் விற்பவர்கள், கஞ்சா விற்பவர்களுக்கே இன்று மரியாதை. இந்த ஆட்சியை அகற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது.
இந்திய அரசியலில் அடுத்த 60 நாட்கள் மிக முக்கியமானது. இன்றைய அரசியல்வாதிகளைப் போல அல்லாமல் பிரதமர் மோடி அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை வகுத்துவிட்டு தமிழகத்துக்கு வந்திருக்கிறார். இந்தியாவை உலக நாடுகளில் முதலிடத்துக்கு கொண்டு வரும் வரை அவர் ஓய்வெடுக்க மாட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிறுத்தை படம் பதித்த பட்டு: பிரதமருக்கு வழங்கப்பட்ட காஞ்சி பட்டு குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது,‘‘பிரதமர் மோடி மக்களுக்காக மட்டுமல்ல வாய்பேச முடியாத ஜீவன்களுக்கும் பாடுபடுகிறார். 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது 7,910 சிறுத்தை புலிகள் இருந்தன. இன்று அவை 75 சதவீதமாக உயர்ந்து 13,874 ஆக இருக்கின்றன. அதற்கு நன்றிதெரிவிக்கும் விதமாக சிறுத்தை படம் பதிக்கப்பட்ட காஞ்சிபுரம் பட்டுவழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.