சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்த நோட்டீஸ் விவகாரம் குறித்து மார்ச் 6-ம் தேதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தன.
இதுதொடர்பான 3-ம் கட்ட சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து ஜன.9, 10-ம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையில், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என தொழிலாளர் துறை தனி இணை ஆணையர் அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். பேச்சுவார்த்தையும் மார்ச் 6-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 7-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கங்கள், போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.