சென்னை: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வலியுறுத்தி சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் எதிரில் 4 நாட்களுக்கும் மேலாக சட்டக் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
காங்கிரஸும், பாஜகவும்.. அவர்களை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
இது ஏதோ இன்று நேற்று நடக்கும் போராட்டமல்ல. கடந்த 2006-ம் ஆண்டே அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க அனுமதி கேட்டு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. அன்றைக்கு ஆண்ட காங்கிரஸ் கட்சியும், இன்றைக்கு ஆண்டு கொண்டு இருக்கிற பாஜகவும் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
வழக்கறிஞர்களின் இந்த போராட்டத்தை அரசுக்கு எதிரான போராட்டமாக எதிர்கொள்ள தமிழக அரசு முனைவது கண்டிக்கத்தக்கது. காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்போராட்டத்தில் பங்கு கொண்டு ஆதரவளிப்பது விரைந்து தீர்வு காண வாய்ப்பாக அமையும். இப்போராட்டத்தை தனதாக்கி கொள்ள முதல்வர் முன் வர வேண்டுமே தவிர, இதனை எதிர்ப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில், விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச்செயலாளர் வி.கே.வி.துரைசாமி, சென்னை மண்டல செய்தித் தொடர்பாளர் சைதை சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க கோரும் வழக்கறிஞர்களின் போராட்டத்துக்கு தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளடக்கிய மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.