சென்னை: கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில், கோடைகாலத்தின் போது தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சார விநியோகம் வழங்குவது குறித்து, தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடன் காணொலி வாயிலாக நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், வரும் கோடைகாலத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை குறித்தும், தேவையைப் பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அனல், நீர்,காற்றாலை, சூரிய மின்சக்தி மற்றும்எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தின் அளவுகுறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாத உச்சபட்ச மின் தேவை முறையே 18 ஆயிரம் மெகாவாட் மற்றும் 19,900 மெகாவாட் வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின் வாரியம் மூலம் 15,093 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மீதமுள்ள மின் தேவையை மார்ச் மாதம் 3,571 மெகாவாட் மற்றும் ஏப்ரலில் 4,321 மெகாவாட் மின்சாரத்தை வெளிச்சந்தை, மின் பரிமாற்றம் மற்றும் குறுகியகால ஒப்பந்தம் மூலம் பெறப்படும். இதன் மூலம், மாநிலத்தின் கோடைகால மின் தேவை முழுமையாக பூர்த்திசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புஅரசு பொதுத்தேர்வுகள் முடிவடையும் வரை மாதாந்திர பராமரிப்புக்கான மின் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டாம் என தலைமைப் பொறியாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், மின்னகம்மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் தொடர்பாகஉடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார். ஆய்வுக் கூட்டத்தில், மி ன்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மகாஜன், இயக்குநர் (பகிர்மானம்) இரா.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.