சென்னை: விசிக தலைவர் திருமாவளவனை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சந்தித்தார். சென்னை, அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்துக்கு நேற்று வருகை தந்த செல்வப்பெருந்தகையை விசிக தலைவர் திருமாவளவன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தொடர்ந்து அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறும்போது, தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின் விசிக தலைவர் திருமாவளனை சந்தித்து வாழ்த்து பெற்றேன். வரும் மக்களவைத் தேர்தலில் எந்தத் தொகுதியில் அவரும், விசிகவினரும் போட்டியிடுகின்றனரோ அங்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் உறுதி செய்வோம். காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு நாட்களில் முடிவடையும்.
குஜராத்தில் டன் கணக்கில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன என்பதற்கான பட்டியலே இருக்கிறது. இது தொடர்பாக அண்ணாமலை பேச வேண்டும். அதானி துறைமுகத்தில் இருந்து ஆந்திராவுக்கு போதைப் பொருள் அனுப்பப்படுகிறது. இதை செய்வது பாஜகவை சார்ந்த தொழிலதிபர்கள், தலைவர்கள்தான் என்றார்.
தொடர்ந்து திருமாவளவன் கூறுகையில், “போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ள திமுக பிரமுகர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இல்லை. இருப்பினும் குற்றம்சாட்டப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை. அவர்கள் கனவு பலிக்காது. இந்த தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடத்தை தமிழக மக்கள் புகட்டுவார்கள்” என்றார்.
இச்சந்திப்பின்போது விசிக தலைமை நிலையச் செயலாளர் பாலசிங்கம், துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.