சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, எந்த புதிய திட்டத்துக்கான அரசாணையும் பிறப்பிக்க கூடாது. இதுதொடர்பான பதிவேட்டில், கடைசி அரசாணைக்கு கீழே கோடு வரைந்து, கையெழுத்திட்டு அதை புகைப்படம் எடுத்து 2 மணி நேரத்துக்குள் அனுப்ப வேண்டும் என்று அரசுத் துறைகளின் செயலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலான பிறகு, அரசின் புதிய திட்டங்களை அறிவிக்கவோ, திட்டங்களுக்கான புதிய அரசாணைகளை வெளியிடவோ கூடாது.
ஆனால், கடந்த தேர்தல்களின்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டதுபோல, முன்தேதியிட்டு அரசாணைகள் பிறப்பிக்கப் பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. வரும் தேர்தலில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
தேர்தல் அறிவிப்பு… விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஊடகங்களில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதும், சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள், துறையின் அரசாணை பதிவேட்டில் கடைசியாக பதிவுசெய்யப்பட் டுள்ள அரசாணைக்கு கீழ் ஒரு கோடு வரைந்து, அதில் கையொப்பமிட்டு, அந்த பக்கத்தை புகைப்படம் எடுத்து, தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு 2 மணி நேரத்துக்குள் அனுப்ப வேண்டும்.
கடந்த தேர்தலின்போது பின்பற்றிய அதே நடைமுறை தற்போதும் பின்பற்றப்பட வேண்டும். இதன்மூலம், குற்றச்சாட்டுகளை தவிர்க்க முடியும். ஒருவேளை, சம்பந்தப்பட்ட துறை செயலர் இல்லாதபட்சத்தில், அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரி அப்பணியை மேற்கொண்டு உரிய காலவரையறைக்குள் புகைப்படத்தை அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.