சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மார்ச் 3ம் தேதி நடைபெறவுள்ள தீவிர கூடுதல் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில், காணொலி காட்சி மூலம் ரிப்பன் மாளிகை வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், கூடுதல் ஆணையர் ஜெயசந்திர பானு ரெட்டி, நிலைக்குழு தலைவர் சாந்தகுமாரி, மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் எஸ்.பானுமதி, உலக சுகாதார நிறுவன கண்காணிப்பு அலுவலர் டாக்டர் சுரேந்தரன், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மோகன்ராமன், கிருஷ்ணமூர்த்தி, இந்திய குழந்தை மருத்துவ குழும துணை தலைவர் அமல்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஆணையர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களில் அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், அங்கன்வாடி அலுவலர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவரும் ஒருங்கிணைந்து பணிபுரிந்து அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கிடும் வகையில் முகாமினை சிறப்பாக நடத்திட உறுதுணையாக இருக்க வேண்டும்.
உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ நோய் இல்லாத நாடாக அறிவித்துள்ள போதிலும், அண்டை நாடுகளில் போலியோ தாக்கம் இருப்பதால் போலியோ நோய் கிருமி பரவும் அபாயம் உள்ளது. இதனால், போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. கடந்த 28 ஆண்டுகளாக அகில இந்திய அளவில் தீவிர கூடுதல் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3ம்தேதி சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,646 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது.
பொதுமக்கள் வீட்டின் அருகாமையில் உள்ள சொட்டு மருந்து மையத்திற்கு சென்று, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச்சூழலிருந்து அறவே ஒழிக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து முறையாக கொடுத்திருந்தாலும், மார்ச் 3ம்தேதி நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் அவசியம் சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போட்டுக்கொள்ள வேண்டும்.
தீவிர போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக, சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. எனவே, 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்தினை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
* நடமாடும் முகாம்கள்
மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்களில் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தம் காரணமாக சென்னை மாநகரில் குடியேறி, இங்கு தொடர்ந்து தங்கி இருப்பவர்கள், இந்த நாளில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறவுள்ளனர். அதுமட்டுமின்றி அன்றைய தினம் சென்னை வந்து போகும் குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம்.
* 6.68 லட்சம் பேருக்கு இலக்கு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாழும் மக்கள் தொகை மொத்தம் 77,75,915. இதில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5,53,343 ஆகும். இந்த குழந்தைகளுக்கு 1,445 நிரந்தர முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மேலும், 155 முகாம்கள் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், 46 நடமாடும் மையங்கள் மூலமாகவும் என மொத்தம் 1,646 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. சென்னையில், சுமார் 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
* காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை
போலியோ சொட்டு மருந்து முகாம்களில், சிறப்பாக பணி செய்ய பல்வேறு அரசுத்துறை பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், அங்கன்வாடி அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 7,000 நபர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்த முகாம்கள் காலை 7 மணிக்கு தொடங்கி, இடைவெளியின்றி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.