சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் புதிய துணை மின் நிலையங்கள், வெள்ளத் தடுப்பு பணிகள், குடியிருப்புகள், அரசு அலுவலக கட்டிடங்கள், கிடங்குகள், நெல் கொள்முதல் நிலையங்கள் உட்பட ரூ.8,802 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ரூ.1,615.29 கோடியில் தூர்வாரும் பணிகள், நெல் சேமிப்பு தளங்கள் உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு, முடிவுற்ற திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அந்த வகையில், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், அரியலூர், ஈரோடு, சென்னை, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.7,300.54 கோடியில் நிறுவப்பட்டுள்ள 20 புதிய துணை மின்நிலையங்களையும், நாகப்பட்டினத்தில் ரூ.4.95 கோடியில் கட்டப்பட்டுள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ரூ.209.01 கோடியில் திறன் மேம்படுத்தப்பட்ட 69 மின் மாற்றிகளின் செயல்பாட்டையும் தொடங்கி வைத்தார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி அருகிலும், ஈவினிங் பஜார் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்புக்கு குறுக்கேயும் ரூ.9.75 கோடியில் கட்டப்பட்டுள்ள இரண்டாம் சுரங்கப்பாதை, நீர்வளத் துறை சார்பில் சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.111.35 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட கட்டமைப்புகள், வெள்ளத் தடுப்பு பணிகள், திருச்சி, முக்கொம்பில், கொள்ளிடம் ஆற்றில் ரூ.414 கோடி செலவில் கட்டப்பட்ட நீரொழுங்கி ஆகியவற்றையும் திறந்து வைத்தார். நீர்வளத் துறை சார்பில் ரூ.4.48 கோடி மதிப்பில் பொறியாளர் பயன்பாட்டுக்கான 50 ஜீப்களை வழங்கினார்.
இதுதவிர, வேளாண் துறை சார்பில் ரூ.210.75 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்கள், வருவாய்த் துறைசார்பில் ரூ.12.27 கோடியில் கட்டப்பட்ட குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார்
மணிமண்டபங்கள் திறப்பு: செய்தித் துறை சார்பில் ரூ.7.85 கோடியில் கட்டப்பட்ட, மு.வரதராசனாருக்கு சிலையுடன் கூடிய அரங்கம், அண்ணல் தங்கோசிலை, இரட்டைமலை சீனிவாசன் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம், பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் மணிமண்டபம், வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் புதிய சிலை ஆகியவற்றையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிப்புலத் துறையில் ரூ.7.12 லட்சத்தில் கவிஞர் தமிழ்ஒளி சிலை, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.14.15 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்கள், உயர்கல்வித் துறை சார்பில் ரூ.134.15 லட்சத்தில் கட்டப்பட்ட கல்விசார் கட்டிடங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூ. 6.67 கோடியில் கட்டப்பட்ட கிடங்குகள், ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள், திண்டுக்கல் – காளாஞ்சிபட்டியில் ரூ.10.15 கோடியில் கட்டப்பட்ட போட்டித் தேர்வு பயிற்சி மையம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
சுகாதாரத் துறை சார்பில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.313.25 கோடியில் புதிய கட்டிடம், உபகரணங்கள், ரூ.29 கோடியில், மதுரையில் பல இடங்களில் கட்டப்பட்ட மருத்துவத் துறை கட்டிடங்கள் என மொத்தம் ரூ.8,801.93 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திட்டப் பணிகளுக்கு அடிக்கல்: அதிகனமழையால் பாதிக்கப்பட்ட 6 தென் மாவட்டங்கள், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 வட மாவட்டங்களில் ரூ.726.50 கோடியில் நிரந்தர சீரமைப்பு, வெள்ளத் தடுப்பு பணிகள்,24 மாவட்டங்களில் ரூ.115 கோடியில் 1,004 சிறப்பு தூர்வாரும் பணிகள், சிஎம்டிஏ சார்பில் ரூ.558.45 கோடியில் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய நவீனநகர்ப்புற பொது சதுக்கம், மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலையம், கிளாம்பாக்கத்தில் புதிய நடை மேம்பாலம் உள்ளிட்ட திட்டப் பணிகள், உயர்கல்வித் துறை சார்பில் ரூ.86.89 கோடியில் கட்டிடங்கள், தோட்டக்கலைத் துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.5.95 கோடியில் நாய் இனங்கள் பாதுகாப்பு விரிவாக்க கட்டிடம், நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் ரூ.95 கோடியில் 40 நெல்சேமிப்பு தளங்கள், ரூ.27.50 கோடியில் 6 கிடங்குகள், என ரூ.1,615.29 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் துறை அமைச்சர்கள், தலைமைச் செயலர், துறைகளின் செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.