சென்னை: திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் ஊடகம் மற்றும் தகவல் தொடர் பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர் பிரிவு தலைவராக, பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் அஜோய் குமார் அறிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த ஆனந்த் சீனிவாசன் பங்கு சந்தை, நாட்டின் பொருளாதாரம், நிதி நிலைமை குறித்து பேசி யூடியூப் தளத்தில் பிரபலமானவர். நேற்று துபாயில் இருந்து சென்னை வந்த ஆனந்த் சீனிவாசனுக்கு, சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிஸ் கட்சியில் இந்த பதவியை எனக்கு கொடுத்தது, எனக்கே இன்ப அதிர்ச்சியாக உள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் உள்ள கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதற்காக தீவிரமாக பணியாற்றுவோம். தமிழகம் அனைவரையும் வரவேற்கிறது. அதன்படி தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறோம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும். கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.