சென்னை: நெம்மேலியில் ரூ.2,465 கோடியில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி – 1 கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நெம்மேலி – 2 திட்டத்தில் 15 கோடி லிட்டர் திறன் உடைய சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி கடந்த 2019ல் தொடங்கப்பட்டது.
கடல்நீர் செல்லும் வகையில் குழாய், உவர் நீர் வெளியேற்றும் குழாய் கடலில் பதிக்கப்பட்டது. சோழிங்கநல்லுாரில் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, நீரேற்று நிலையம் மற்றும் 48 கி.மீ தூரத்தில் குழாய் பதிக்கப்பட்டது. இந்த பணிகள் கடந்தாண்டு மே மாதம் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து, மின் இணைப்பு சாலை சந்திப்புகளில் குழாய் இணைப்பு போன்ற பணிகள் நடைபெற்றன.
அனைத்து பணிகளும் முடிவடைந்து நான்கு மாதங்களுக்கு முன் சோதனை ஓட்டம் தொடங்கியது. இந்நிலையில் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாவது நிலையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். நாள்தோறும் 15 கோடி லிட்டர் நீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் இந்த கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், உள்ளகரம், ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 9 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை நெம்மேலியில் தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் 95 முடிவுற்ற திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரூ.1,802 கோடி மதிப்பீட்டில் 39 புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கடும் நிதி நெருக்கடியிலும் ரூ.100 கோடியில் குடிநீர் திட்டங்களை செயல்படுத்துகிறோம். மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை 2010ல் கருணாநிதி திறந்து வைத்தார். நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை நான் திறந்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.