சென்னை: மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர். மயிலாப்பூரில் கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உள்ளிட்ட ஆலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மெரீனா கடற்கரையில் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திரம், மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்து மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம். உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக் கடலில் இருக்கும் ஆன்மா, இறைவனது அருட்கடலை வேண்டும் நாளே மாசி மகத்தின் சிறப்பாகும். இந்த நாளை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். புண்ணிய இடங்களில் தீர்த்தமாட முடியாதவர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு சென்று உமாமகேஸ்வரனை தரிசிப்பார்கள். மாசி மகம் விழாவை முன்னிட்டு இன்றைய தினம் மயிலாப்பூரில் கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், விருபாக்ஷிஸ்வரர், மாதவ பெருமாள் ஆகிய கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மெரினா கடற்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி முடிந்த பின்னர் அருளாசி வழங்கினார். மெரீனா கடற்கரையில் உற்சவ மூர்த்திகள் தீர்த்தவாரி நடைபெற்ற பின்னர் ஏராளமானோர் கடலில் நீராடினர். மயிலாப்பூர் மாதவ பெருமாள் ஆலயத்தில் உள்ள தெப்பக்குளத்தில் ஏராளமானோர் புனித நீராடி இறைவனை வழிபட்டனர்.
மாசி மகத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மணிமுத்தாறில், இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குவிந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று காலை முதல் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
விருத்தாசலம் தல தீர்த்தமான மணிமுத்தாறில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிப்பட்டால், கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். மேலும் சகல தோஷங்களும் ரோகங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். இந்த நதியில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால் அது சுண்ணாம்பு கற்களாக மாறி இங்கேயே தங்கி விடுவதாக தலப்புராணம் கூறுகிறது. எனவே,”காசியை விடவும் வீசம் பெருசு விருத்தக்காசி” என்ற பெருமையை விருத்தாசலத்திற்கு உருவாக்கியது. காசி கங்கைக்கு இணையானது மணிமுத்தாறு. காசி போன்ற சிறப்பு வாய்ந்த மணிமுத்தாறில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கில் குவிந்த பொதுமக்கள், தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
இதே போல கடலூரில் வெள்ளிக்கடற்கரையில் அதிகாலை முதலே ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபட்டனர். சுற்றுவட்டார கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.