சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து, அரசுக்கு தொழிலாளர் தனி இணை ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்தம், காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பது போன்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து விடுத்து வருகிறார்கள். இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
சங்கங்கள்: அந்தவகையில், அரசு சார்பிலும், தொழிற்சங்கங்கள் சார்பிலும், இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. நேற்றுகூட, போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.. தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் சென்னையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம் மற்றும் பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆனால், இந்த பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் கிடைக்கவில்லை. அதனால், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற 6ம் தேதிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை: அதேசமயம், 2 விதமான முக்கிய விஷயங்கள் இந்த பேச்சுவார்த்தை மூலம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.. முதலாவதாக, நேற்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை முடிவில் துணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாம்..
முத்தரப்பு பேச்சுவார்த்தையில், முன்பைவிட இப்போது முன்னேற்றம் உள்ளதாகவும், தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை தமிழக அரசின் மேற்பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பாகவும் தொழிற்சங்கத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. இரண்டாவதாக, போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சை, விரைவில் துவங்குமாறு, அரசுக்கு தொழிலாளர் தனி இணை ஆணையர் அறிவுறுத்தியிருக்கிறார்..
நிவாரணம்: முத்தரப்பு பேச்சுவார்த்தையில், இறுதியாக தொழிலாளர் தனி இணை ஆணையர் பேசியபோது, “ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை விரைவில் போக்குவரத்து நிர்வாகங்கள் துவங்க வேண்டும். 3,000 ரூபாய் இடைக்கால நிவாரணம் தொடர்பான தொழிற்சங்கங்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
போக்குவரத்து ஊழியர்களுக்கான, 15வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சில், நிர்வாகம் தரப்பில் பங்கேற்க நிதிதுறைச்செயலாளர் உட்பட 14 பேர் குழு அமைத்து, கடந்த 6ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது..
அரசாணை: இப்போது, இந்த பேச்சுவார்த்தை நடத்தும் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்யும் வகையில், நிதித்துறைச் செயலர், சென்னை மாநகரம், விரைவு, சேலம் போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குனர்கள், மாநகர போக்குவரத்துக் கழக தலைமை நிதி அலுவலர் ஆகிய 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது..
அதுமட்டுமல்ல, இதற்கான அரசாணையையும் போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி அதிரடியாக பிறப்பித்திருக்கிறார்.. சமீபகாலமாகவே, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு, ஆம்னி பஸ் ஓனர்கள் கோரிக்கை போன்ற விவகாரங்கள் பரபரத்து காணப்பட்ட நிலையில், தொழிலாளர்களின் கோரிக்கை அரசின் பார்வைக்கு சென்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருப்பதும், ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்த மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் நடவடிக்கைகளும், போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.