சென்னை: கூவத்தூரில் தங்கிய அதிமுக எம்எல்ஏக்களையும், நடிகைகளையும் தொடர்புப்படுத்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு புதிய சிக்கலில் சிக்கி உள்ளார். 24 மணிநேரத்தில் பொதுவெளியில் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
சேலம் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏவி ராஜூ. இவர் சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கினார். இந்நிலையில் தான் அவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்து வருகிறார்.
அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அந்த சமயத்தில் விடுதியில் நடந்த சம்பவம் குறித்து அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏ வெங்கடாச்சலம் கூவத்தூரில் என்ன கூத்து அடித்தனர் என்பது தெரியும். ஒரு பிரபல நடிகையின் பெயரை கூறி அவரை வெங்கடாச்சலம் கேட்டதாகவும், அவரை கருணாஸ் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் கூறினார். மேலும் பெயரை குறிப்பிடாமல் நடிகைகள் சொகுசு விடுதிக்கு சென்றதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
கூவத்தூரில் நடிகைகளா? ‘என்ன முட்டாள்தனம் இது’.. சேலம் ஏ.வி.ராஜுவை வெளுத்துவிட்ட நடிகை ஷர்மிளா இதற்கு நடிகர், நடிகைகள் உள்பட அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தான் இந்த விவகாரத்தில் சம்பந்தப்படுத்தி பேசப்பட்ட விவகாரத்தில் சர்ச்சைக்கரிய பேச்சு தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜுவுக்கு சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.