சென்னை மாநகராட்சி 2024-25ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
2024 – 25ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அப்போது, பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்ட நிலையில், கல்வித்துறையில் மட்டும் 27 அறிவிப்புகள் அறிவித்தார். அந்த வகையில் சென்னை மாநகராட்சி 208 தொடக்க பள்ளிகள் மற்றும் 130 நடுநிலை பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான 64,022 மாணவர்களுக்கு ஷூ மற்றும் 2 செட் சாக்ஸ் முதன்முறையாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக 3.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர் இளம்பிள்ளைகளுக்கான ஆலோசனை வழங்க 35 லட்ச ரூபாய் செலவில் 10 ஆலோசகர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கல்வியை மேம்படுத்த உடற்கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பயிற்சி அளிக்க தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணி அமர்த்துதல், அவர்கள் போட்டிகளுக்கு சென்று வரும் செலவு என 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடக்க மற்றும் நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவ மாணவர்களுக்கு மொழி பாடங்களில் எழுத்து திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்று 11 ஆம் வகுப்பினை சென்னை மாநகராட்சி பள்ளியில் தொடரும் மாணவர்களில் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இஸ்ரோ உள்ளிட்ட தேசிய அறிவியல் சார்ந்த மையங்களுக்கு அழைத்து செல்ல 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் மாமன்ற உறுப்பினர்களை தலைவர்களாக கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மையம்
அமைக்கப்படும் எனவும் மாணவர் வருகையை 95 சதவீதம் மேல் உயர்த்திடும் பள்ளிகளுக்கு “excellence school” சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.