சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியான செய்திக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
சென்னை அருகே புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் வெளி மாவட்ட பேருந்துகளுக்கான கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இது குறித்து தற்போது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் விளக்கமளித்து உள்ளது.
அதில், “கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருசக்கர, நான்கு சக்கர பேருந்துகளுக்கான பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 19.02.2024 அன்றைய தனியார் நாளிதழில் வரப்பெற்ற செய்தி முற்றிலும் தவறான செய்தியாகும். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் 30.12.2023 அன்று திறக்கப்பட்ட நிலையில், அன்று முதல் பேருந்து முனையத்தில் நுழையும் ஆம்னி பேருந்துகளுக்கென நாளொன்றுக்கு ரூ.150/- கட்டணமாகவும், பிரத்யேக வாகனம் நிறுத்துமிடத்தில் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்டவாறு இருசக்கர வாகனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10/-ம், நான்கு சக்கர வாகனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 20/-ம்.
அவை நிறுத்தப்படும் நேரத்திற்கேற்ப கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில், தனி டோக்கன் எந்திரம் மூலம் டோக்கன் வழங்கி, பயன்பாட்டு நேர அடிப்படையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மூலம் சிஎம்டிஎ அலுவலர்களின் முன்னிலையில் வசூலிக்கப்பட்டு சிஎம்டிஏ-வின் பிரத்யேக அலுவலக வங்கிக் கணக்கில் தினசரி செலுத்தப்பட்டு வருகிறது. இப்பணியினை சிஎம்டிஏ அலுவலர்கள் தினமும் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 30.12.2023 முதல் 19.02.2024 வரை வாகன நிறுத்தத்தினை 6,752 கார்களும், 56,662 இருசக்கர வாகனங்களும், 1958 வாடகை டாக்சிக்களும் பயன்படுத்தி உள்ளனர். மேலும், மொத்தமாக 13,456 முறை ஆம்னி பேருந்துகள் இப்பேருந்து முனையத்தை பயன்படுத்தி உள்ளனர். மேற்கண்ட வாகனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம் / நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு 19.02.2024 வரை ரூ.38,02,920 /- தொகையானது சிஎம்டிஏ வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
எனவே, இப்பணியில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் தராமல் உரிய முறையில் கட்டணம் வசூலிக்கப்படுவதையும் தினமும் சிஎம்டிஏ வங்கி கணக்கில் செலுத்தப்படுவதையும் சிஎம்டிஏ அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எனவே, நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் விளக்கத்தை முழுமையாக பதிவு செய்யாமல் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிடப்பட்டிருப்பது முற்றிலும் வருந்தத்தக்கது. எனவே, மேற்குறிப்பிட்ட எங்களின் முழு விளக்கத்தை மறுப்பு செய்தியாக வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளும்படி செய்தி ஆசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.