சென்னை: நில உரிமைக்காக போராடுபவர்கள் மீது அரசே அவதூறு பரப்புவதுடன், அவமானப்படுத்துவதா? என்றும் மேல்மா விவசாயிகளுடன் முதல்வர் பேச வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘தமிழக அரசின் நிலப்பறிப்பை எதிர்த்து, மண்ணுரிமைக்காக போராடி வரும் தங்களின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக செய்யாறில் இருந்து நேற்று மாலை சென்னைக்கு புறப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா பகுதி விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தங்களைச் சந்திக்க முதல்வர் மறுத்து விட்டதைக் கண்டித்து 10 விவசாயிகள் காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டிருக்கின்றனர். விவசாயிகளுக்கு எதிரான தமிழக அரசின் அடக்குமுறை அதிர்ச்சியளிக்கிறது. மேல்மா விவசாயிகள் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. விவசாயிகளின் குறைந்த பட்ச உரிமைகளைக் கூட மதிப்பதற்கு தமிழக அரசு தயாராக இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரிய செயலாகும்.
செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவை விரிவாக்கம் செய்வதற்காக தங்களுக்கு சொந்தமான 2,700-க்கும் கூடுதலான விளைநிலங்கள் அரசால் கையகப்படுத்தப் படவிருப்பதைக் கண்டித்தும், அம்முயற்சியை கைவிட வலியுறுத்தியும் மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடன் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய தமிழக அரசு, அவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது நியாயமற்றது.
நில உரிமைக்காக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத தமிழக அரசு, அவர்கள் போராட்டம் நடத்திய இடத்தை சிதைத்தது. 7விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது. பா.ம.க உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பால் அவர்கள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை அரசு திரும்பப் பெற்றது. அதன் பிறகும் மேல்மா கூட்டு சாலை அருகில் விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், இது குறித்து சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்களுக்கு நிலம் இல்லை’ என்று அவதூறு குற்றஞ்சாட்டினார்.
அமைச்சரின் அவதூறுக்கு கண்டனம் தெரிவித்துள்ள விவசாயிகள், வடஆளப்பிறந்தான் கிராமத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் உருவபொம்மையை எரித்து முழக்கமிட்டனர். அதுமட்டுமின்றி,குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நிலம் இல்லை; கைது செய்யப்பட்டவர்கள் நிலமற்றவர்கள் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்த பொய்யான கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், தொடர்ந்து விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசி வரும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும், மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க, செய்யாறு அடுத்த மேல்மா கூட்டுச்சாலையில் இருந்து நேற்று புறப்பட்டனர். ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
குறைந்தது 20 விவசாயிகளையாவது முதல்வரைச் சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று போராட்டக் குழுவினர் வலியுறுத்திய நிலையில், 5 பேருக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக தெரிவித்த காவல்துறை, பின்னர் அவர்களை சந்திக்க முதல்வர் விரும்பவில்லை என்று கூறி அனுமதி மறுத்து விட்டது. அதைக் கண்டித்து தான் மேல்மா கூட்டு சாலையில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் இடத்தில் 10 விவசாயிகள் உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் நெருக்கடி அளிக்கப்படுகிறது. இது கண்டிக்கத்தகது.
இந்தியாவிலேயே நில உரிமைக்காக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்ட அவலம் தமிழ்நாட்டில் தான் நடைபெற்றது. மண்ணுரிமைக்காக போராடும் விவசாயிகள் மீது, சட்டப்பேரவையில் முதல்வர் முன்னிலையிலே அமைச்சர் எ.வ.வேலு அவதூறு பரப்புகிறார். நிலத்தை கையகப்படுத்தும் தொழில்துறை மற்றும் வருவாய்த்துறைக்கோ, விவசாயிகளின் நலன் காக்கும் வேளாண் துறைக்கோ அமைச்சராக இல்லாத எ.வ. வேலுவின் இந்த அத்துமீறலை கண்டிக்க வேண்டிய முதல்வர், அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தங்கள் தரப்பு நியாயத்தை விளக்க விரும்பும் விவசாயிகளையும் முதல்வர் சந்திக்க மறுக்கிறார் என்றால் விவசாயிகளின் நலன் குறித்து பேசும் தகுதியை அவர் இழந்து விட்டார். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது என்றாலும், விவசாயிகளை முதல்வர் சந்திக்க எந்த தடையும் இல்லை.
ஒரு பக்கம் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து விட்டு, இன்னொரு புறம் விவசாயிகள் மீது அவதூறு பரப்புவது, அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது போன்ற செயல்களில் அரசு ஈடுபடுவது சரியல்ல. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக மேல்மா விவசாயிகளை அழைத்து பேச வேண்டும்; அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.