சென்னை: சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டரை கோரியுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையின் பெருக்கத்தால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. இதனால் சில கிலோ மீட்டர் தூரங்களை கூட கடக்க மணிக்கணக்கில் ஆகும் நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஒருபுறம் இருந்தாலும் வாகன புகையால் காற்று மாசுபடுகிறது.
இதனால் காலநிலை மாற்றத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே பொது போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவைகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் கோயம்பேட்டிலிருந்து சென்னை புறநகர் பகுதிகளையும் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2-ஆவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுச்சேரி வரையிலான 3ஆவது வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அது போல் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4ஆவது வழித்தடத்தை புதிய விமான நிலையம் அமையவுள்ளதாக கூறப்படும் பரந்தூர் வரை நீட்டிக்கவும் மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரையிலான 5ஆவது வழித்தடத்தில் கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல் கட்டமாக சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரை 16.07 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த பணிகளை 2028ஆம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் டெண்டருக்கான ஆவணங்கள் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் சிஎம்ஆர் நிர்வாகத்தின் இணையத்தளத்தில் இருக்கும். டெண்டர் புள்ளிகளை தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் மார்ச் 27ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு முடிவடைகிறது. தமிழக பட்ஜெட்டிலும் சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு ரூ 12000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. 119 கி.மீ. நீளத்திற்கு நடக்கும் மெட்ரோ ரயில் பணிகளை 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் கோயம்பேட்டிலிருந்து ஆவடிக்கு சர்ரென பறக்கலாம்!