சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல்தகுதி குறித்து கேள்வி எழுப்ப முடியுமா என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கோவையை சேர்ந்த எஸ்.வி.சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது சொத்து விவரம், குற்ற வழக்குகள் பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் உடல்தகுதி குறித்த 30 நாட்களுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை அறிக்கையையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு அறிவுறுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி. பரதசக்ரவர்த்தி அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், ‘‘வேட்பாளர்களின் உடல்தகுதி குறித்த மருத்துவ பரிசோதனை அறிக்கை என்பதுசம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட விஷயம் தொடர்பானது என்பதால், அந்த விவரங்களை தாக்கல் செய்யும்படி கோர முடியாது.
ஒருவேளை வேட்பாளர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றால்கூட அதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்’’ என்றார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், ‘‘தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதியின் உடல் தகுதி மற்றும் உடல்நிலையை தெரிந்து கொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது. சாதாரண குடிமக்கள் மருத்துவ காப்பீடு பெற மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை கோரும்போது, வேட்பாளர்களிடம் ஏன் அதை கோரக்கூடாது’’ என்றார்.
அப்போது நீதிபதிகள், ‘‘வேட்பாளர்களுக்கு என்னென்ன நோய்கள் உள்ளது என்பது குறித்து தெரிவிக்கும்படி வற்புறுத்த முடியாது. அதேநேரம், அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்கள் உடல் தகுதி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கடமையை சிறப்பாக ஆற்றுவதற்கான உடல்தகுதியை பெற்றுள்ளனரா என்பது குறித்து சான்றை பெற்று தாக்கல் செய்யலாம்’’ என கருத்து தெரிவித்தனர்.
பின்னர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல்தகுதி குறித்து கேள்வி எழுப்ப முடியுமா என்பது குறித்து தேர்தல்ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.