சென்னை: தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன்பு பல்வேறு அரசுத் திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகள், அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி செலவில் பழுதுபார்த்து, சீரமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசியதாவது: நான் முதல்வராக பொறுப்பேற்ற 33 மாதங்களில் பல்வேறு சாதனைகளை தமிழகம் படைத்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்துக்கு 9 சதவீத பங்கை தருவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2-வது இடத்தில் இருப்பது, தேசிய வளர்ச்சி 7.24 சதவீதமாக உள்ள நிலையில் தமிழக வளர்ச்சி 8.19 சதவீதமாக இருப்பது, தேசிய அளவில் பணவீக்கம் 6.65 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் 5.97 சதவீதமாக இருப்பது, ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் நாட்டிலேயே முதல் மாநிலம், மின்னணு பொருள் ஏற்றுமதியில் முதல் இடம், தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-வது இடத்தில் இருந்து 3-ம் இடத்துக்கு முன்னேறியது, கல்வியில் 2-வது இடம், புத்தாக்க தொழில்களில் முதல் இடம், இளைஞர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்டோர் தங்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதாக சொல்வது ஆகியவை இந்த ஆட்சியின் 10 சாதனைகள்.
கிராமப்புற மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2001-ம் ஆண்டுக்கு முன்பு பல்வேறு அரசுத் திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகளை, அடுத்த 2 ஆண்டுகளில் பழுதுபார்க்கவும், சீரமைக்கவும் ரூ.2,000 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1.15 கோடி பெண்கள் மாதம் ரூ.1,000 பெறுகின்றனர். பெண்கள் 445 கோடி முறை இலவச பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடி பேர், முதல்வரின் காலை உணவு திட்டத்தில் 16 லட்சம் பிள்ளைகள், நகைக்கடன் தள்ளுபடியில் 13.12 லட்சம் பேர், கூட்டுறவு கடன் தள்ளுபடியில் 1 லட்சம் பேர், புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1,000 வீதம் 2 ஆண்டுகளுக்கு 4.81 லட்சம் மாணவிகள் பயன் பெறுகின்றனர்.
இதுமட்டுமின்றி, கடந்த 33 மாதங்களில் பல்வேறு மாவட்டங்களில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று லட்சக்கணக்கான மக்களுக்கு ரூ.6,569.75 கோடி மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளேன்.
இப்படி தமிழகத்தில் ஒவ்வொருவர் இல்லம்தோறும் உதவி செய்வதுதான் திமுக ஆட்சி. ஒவ்வொரு தனிமனிதரின் கோரிக்கையையும் கேட்டு நிறைவேற்றி வருகிறோம். மகளிர் உரிமை தொகை, விடியல் பேருந்து திட்டம் மூலம், பெண்களின் சமூக பங்களிப்பு 40-ல் இருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. உதவித் தொகை தருவதால் 34 சதவீத மாணவிகள் அதிகமாக கல்லூரிகளை நோக்கி வந்துள்ளனர்.
பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி, சமூக முன்னேற்றத்தையும் சேர்த்து கொடுத்து வருகிறோம். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் கொள்கையை உருவாக்கி, அதன் வழித்தடத்தில் நாம் இயங்குவதால்தான், தமிழகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை, தடுக்கவும் முடியாது.
மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் மத்திய அரசின் தவறான கொள்கைகளை அதிகம் விவரிக்க விரும்பவில்லை. மாநில முதல்வர்களே டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர்.
நாம் சந்தித்த 2 பெரிய இயற்கை பேரிடர்களுக்கு நிவாரண தொகை தரவில்லை. 2022 முதல் ஜிஎஸ்டி இழப்பீட்டை நிறுத்தியதால் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு புதிய சிறப்பு திட்டங்கள் தரப்படுவது இல்லை. தமிழகத்துக்காக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோக கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
‘இந்து தமிழ் திசை’ பாராட்டியதாக பெருமிதம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசும்போது, “இந்தியாவின் முன்னணி பத்திரிகைகள் மட்டுமின்றி, உலகளாவிய பத்திரிகைகளின் கவனத்தை ஈர்த்து அவர்களது பாராட்டை பெறும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பைவிட, 2023-ம் ஆண்டு வெள்ள பாதிப்பை திமுக அரசு சிறப்பாக கையாண்டது என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் பாராட்டியது.
‘கேலோ இந்தியா – சாதித்துக் காட்டிய தமிழ்நாடு’ என்று எழுதியது ‘இந்து தமிழ் திசை’. இப்படி முன்னணி பத்திரிகைகள் பலவும் பாராட்டியுள்ளன” என்று பல்வேறு தமிழ், ஆங்கில நாளிதழ்களின் செய்திகளையும் குறிப்பிட்டு பேசினார்.