சென்னை: தமிழ்நாட்டில் எந்த விழாவாக இருந்தாலும் இறுதியில்தான் தேசிய கீதம் இசைக்கப்படும் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. தொடர்ந்து பேசிய அவர், “சட்டப்பேரவையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன.
இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாகும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன் இவ்வாறு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதையடுத்து கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கும் முன்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில், ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நயினார் நாகேந்திரன்,கே.எஸ் அழகிரி தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் எந்த விழாவாக இருந்தாலும் இறுதியில்தான் தேசிய கீதம் இசைக்கப்படும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
தமிழ்நாட்டில் எந்த விழாவாக இருந்தாலும் இறுதியில்தான் தேசிய கீதம் இசைக்கப்படும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். தேசிய கீதம் பற்றிய ஆளுநர் கோரிக்கை அறியாமையையே காட்டுகிறது. ஆளுநர் ரவி சட்டப்பேரவைக்கு வருவது இதுவே கடைசியாக இருக்கும்.
மரபை ஏற்கிறோம் – பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்
சட்டப்பேரவையின் மரபை ஏற்கிறோம் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் என்ற மரபை ஏற்கிறோம். ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து மரபுப்படியே புறப்பட்டுச் சென்றார்.
மரபுகளை மீறுகிறார் ஆளுநர் – கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ சின்னதுரை
கடந்த 2 ஆண்டுகளாகவே மரபுகளை மீறி ஆளுநர் பேசிக்கொண்டிருக்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.சின்னதுரை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மரபுகள் குறித்து ஆளுநருக்கு தெரியவில்லை. ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் கருப்பு பட்டை அணிந்து இருந்தோம். கடந்த முறை ஆளுநருக்கு தெளிவுபடுத்திய பிறகும் பேரவையில் இருந்து வெளியேற தேசிய கீதம் பிரச்சனையை காரணமாக கூறியுள்ளார்.
காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து
ஆளுநர் வாசிக்கும் உரை என்றால் ஜெய் ஸ்ரீராம், மோடி வாழ்க எனதான் எழுதிக் கொடுக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பிரச்னை செய்ய வேண்டும் என்றே பேரவைக்கு வந்தார்.
ஆளுநரின் போக்கை காட்டமாக விமர்சிக்க வேண்டிய அவசியம் உள்ளது: ஆர்.எஸ்.பாரதி
ஆளுநரின் போக்கை காட்டமாக விமர்சிக்க வேண்டிய அவசியம் உள்ளது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். மொழிக்காக தீக்குளித்தவர்கள் தமிழர்கள் என்ற வரலாறு ஆளுநருக்கு தெரியாது.