சென்னை: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்தை தமிழகத்தில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த அனுமதி இல்லை என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: சங்ககால தமிழர் கடைபிடித்த உலக உடன்பிறப்பு நேயத்தை எடுத்துரைக்கும், கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்ற இந்த மகத்தான வரிகள்தான்இந்த அரசை வழிநடத்திச் செல்கின்றன. தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை பேணிக் காப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
சிறுபான்மையினருக்கு துணை: சிறுபான்மையினர் மற்றும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுடன் என்றும்நாம் துணை நிற்போம். அந்த வகையில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.
2021-ம் ஆண்டில் நடைபெற்றிருக்க வேண்டிய தேசிய பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்போது, சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பையும் ஒருங்கிணைத்து நடத்துமாறு பிரதமரை முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
மாற்றுத் திறனாளி ஓய்வூதியம்: கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.1,500-ல்இருந்து ரூ.2,000 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆகவும்உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
முதியோர்கள், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்டபெண்களுக்கான மாத ஓய்வூதியம்2023-ம் ஆண்டில் ரூ.1,000 இருந்துரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ரூ.845 கோடி கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. 74,073 தகுதியுடைய பயனாளிகள் புதிதாக சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். நடப்பாண்டில் குறுவை சாகுபடி பரப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவில் 5.59 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
முழுமையான வேளாண் வளர்ச்சியை எய்திட தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்திட இந்த ஆண்டில் ரூ.190 கோடி செலவில் 2,504 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2021-ம் ஆண்டில் இருந்துஇதுவரை மொத்தம் 2 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளால்வழங்கப்படும் பசும்பால் மற்றும் எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 ஊக்கத்தொகையாக இந்த அரசு அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டியால் வருவாய் இழப்பு: மாநிலங்கள் தங்களது வரிவிதிக்கும் அதிகாரங்களை விட்டுக் கொடுக்க ஒப்புக் கொண்டபோது ஜிஎஸ்டி முறையின் முந்தைய காலத்துக்கு இணையான வருவாய் எட்டப்படும் வரை மாநிலங்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படும்என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மத்திய அரசு கடந்த 2022ஜுன் 30-ம் தேதியன்று ஜிஎஸ்டிஇழப்பீட்டு முறையை நிறுத்தியதால் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுக்கு ஏறத்தாழ ரூ.20 ஆயிரம்கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம்: சென்னை மெட்ரோ ரயில் 2-ம்கட்டத் திட்டத்தில், மத்திய அரசும்,மாநில அரசும் 50:50 என்ற விகிதத்தில் சமபங்களிப்பு இருக்கும் என்றஅடிப்படையில் ரூ.63,246 கோடிமதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 2021 ஆக.17-ம் தேதி திட்ட முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்தும் இத்திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த நியாயமற்ற அணுகுமுறையின் விளைவாக 2-ம் கட்டத்துக்கான முழு செலவினமும், மாநில அரசால் அதன் வரவு-செலவுத் திட்ட நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது. இதனால், மாநில நிதிநிலையில் கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, மத்திய அரசு இத்திட்டத்துக்கான ஒப்புதலை விரைவில் அளிக்குமாறு வலி யுறுத்துகிறோம்.
மேகேதாட்டு அணை விவகாரம்: மாநிலங்களுக்கு இடையே யான நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டிட இந்த அரசு உறுதியாக உள்ளது. இப்பிரச்சினைகளில் நமது மாநில விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், நதிநீர் பங்கீட்டுக்கான அறிவியல் ரீதியான கணக்கீட்டை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்துவலியுறுத்துவதோடு, காவிரியில் மேகேதாட்டு அணைகட்டுவதை தடுக்க தேவையான அனைத்துமுயற்சிகளையும் முன்னெடுப் போம்.
ரூ.37,906 கோடி பேரிடர் நிவாரணம்: மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் வரலாறு காணாதஎதிர்பாராத மழைப் பொழிவினால் மாநிலத்தின் பொதுச் சொத்துகள் மற்றும் கட்டமைப்புகளுக்கு பெரு மளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, தற்காலிக மற்றும் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளுக்காக தென்மாவட்டங்களுக்கு ரூ.18,214 கோடியும், சென்னை மற்றும்அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குரூ.19,692 கோடியும் நிதி தேவைப் படுகிறது.
மத்திய அரசு அலுவலர் குழுவின் நேரடி ஆய்வின் அடிப்படையில் தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக மத்திய அரசு நிதி வழங்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.