சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.
ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவை,கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற் சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கினர். பின்னர் இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தோல்வியில் முடிந்ததால் கடந்த மாதம் ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வழக்கில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து துறை சங்கங்களுக்கு நீதிமன்றம் பேச்சுவார்த்தை மூலம் சுமூக முடிவை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்கள் நலன் கருதி ஜனவரி 19-ம் தேதி வரை வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக சென்னை நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் மீண்டும் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் நடந்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து, போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் மீண்டும் பிப்ரவரி 21-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் 15-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்தக் குழு ஒன்றை அமைத்து தமிழக அரசின் போக்குவரத்துத்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டு அரசாணையையும் வெளியிட்டுள்ளார். தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அந்த குழுவில் 14 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த அமைத்த குழுவில் நிதித்துறை கூடுதல் செயலாளர், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் உள்ளிட்டோர் உள்ளனர். ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.