சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் 2-வது மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த எஸ். வைத்தியநாதன், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு வழியனுப்பு விழா சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா தலைமை வகித்தார். நீதிபதிகள் ஆர்.மகாதேவன், டி.கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்ட நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, மாநில அரசு ப்ளீடர் ஏ. எட்வின் பிரபாகர், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பேசும்போது, ”நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கடந்த 2013 அக்.25 முதல் தற்போது வரை 67 ஆயிரம் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்துள்ளார். இவரது தந்தை வி.சுப்பிரமணியம் சிறந்த தொழிற்சங்கவாதி. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இவரது தந்தை ஒயிட்காலர் ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்தை தொடங்கியவர். தற்போது மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள நீதிபதி எஸ்.வைத்தியநாதனை அனைவரது சார்பிலும் வாழ்த்துகிறேன் என்றார்.
பின்னர் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நன்றி தெரிவித்துப் பேசும்போது, “இந்நிகழ்வை எனது பெற்றோர் வானில் இருந்து பார்த்து ஆசிர்வதிப்பார்கள். மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக செல்கிறோம் என்பது ஒருபுறம் மகிழ்ச்சிக்குரியது என்றாலும், இங்கிருந்து விடைபெறுவது வருத்தமான ஒன்று.
எனது பெற்றோருக்கு என்னை சேர்த்து 3 பிள்ளைகள். எங்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர். எப்படி நேர்மையாகவும், எளிமையாகவும் வாழ வேண்டும் என்பதை எங்களது பெற்றோரைப் பார்த்து கற்றுக் கொண்டோம். இதுநாள் வரை அதை கடைபிடித்து வருகிறேன். வழக்கறிஞர்கள் தொழிலில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும். போலி வழக்கறிஞர்களால் இந்த சமுதாயத்துக்கே தீங்கு என்பதால் அவர்களை அடையாளம் கண்டு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.
அதுபோல பார் கவுன்சிலிலும் நேர்மையான, கண்ணியமான வழக்கறிஞர்களே நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட வேண்டும். ஏனென்றால் அந்தக் காலத்தில் வழக்கறிஞர்களுக்கு இருந்து வந்த மரியாதை தற்போதும் உள்ளதா என்றால் அது கேள்விக்குறிதான். மோட்டார் வாகன விபத்து வழக்குகளிலும், குடும்ப நலன் சார்ந்த வழக்குகளிலும் வழக்கறிஞர்கள் தங்களது கட்சிக்காரர்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்றார்.