சென்னை : தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஓர் ஆண்டாக அதிகளவில் உருமாற்றம் அடைந்துள்ளது.
தனது தன்மையை அதிகளவு மாற்றிக் கொண்டு இருந்தாலும் அதன் வீரியம் குறைவாக இருப்பதால் அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக இல்லை என்று பொது சுகாதாரத்துறையின் பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. குழந்தைகள், முதியவர்கள் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். மேலும்,”இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சளி, சோர்வு போன்ற அறிகுறிகளும் பாதிப்புகளும் ஏற்படும்.
குறைவான எண்ணிக்கையில் சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். அப்படியான லேசான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,” என அவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார். அதிக பாதிப்புகள் ஏற்படுத்தாது என்பதற்காக மக்கள் கவன குறைவாக இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார். இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது நினைவுகூரத்தக்கது.