சென்னை: காலமுறை ஊதியம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கிராம ஊராட்சி பணியாளர்களின் கேப்ஸ் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கேப்ஸ் சார்பில் பெருந்திரள் முறையீடு இயக்கம் நேற்று சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் நடைபெற்றது. இதற்கு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் கே.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து, வேன் மூலம் வந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
குறிப்பாக, 40 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு தேர்தல் அறிக்கையில் கூறியபடி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் ரூ.250 மாத ஊதியத்தில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தூய்மைக்காவலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தால், நேற்று காலை கிண்டி, சைதாப்பேட்டை, சர்தார் படேல் சாலை, வேளச்சேரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.