சென்னை: வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்வால் ரேசன் கடைகளில் தட்டுப்பாடு ஏற்படாது. போதிய அளவில் அரிசி இருப்பு உள்ளது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
கூட்டுறவுத் துறையில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி மறைந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு தகுதியான 26 பேருக்கு பணிநியமனை ஆணைகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டுறவு சங்கங்களின் வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவுத் துறை சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கூட்டுறவுத் துறை சார்பில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த நிதியாண்டில் ரூ.13,500 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்ட நலையில், இந்த நிதியாண்டில் ரூ.16 ஆயிரம் கோடிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையில் கடந்த இரண்டாண்டுகளில் 9 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அரிசி விலை வெளிச்சந்தையில் உயர்வால் ரேசன் விலைக் கடைகளில் எந்த தட்டுப்பாடும் இல்லை. போதிய அரிசி இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை செயலர் கே.கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.