சென்னை: புதிய மின் இணைப்புகளுக் காக 30 லட்சம் மின் மீட்டர்கள் வாங்க மின்வாரியம் டெண்டர் கோரியுள்ளது. மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க காலதாமதம் ஏற்படுவது, மின்பயன்பாட்டைக் குறைத்து கணக்கெடுப்பது போன்ற முறைகேடுகளால் மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைசெயல்படுத்த மின்வாரியம் முடிவு செய்து, ஆளில்லாமல்தொலைத் தொடர்பு வசதியுடன்,தானாகவே கணக்கெடுக்கும்ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டது.
இதற்காக, மாநிலம் முழுவதும் ரூ.3.03 கோடி இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தவும், பராமரிக்கவும் தனியார் நிறுவனத்தைத் தேர்வு செய்ய கடந்த ஆண்டு டெண்டர் கோரப்பட்டது. இந்நிலையில், 20 லட்சம் மின் மீட்டர்கள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, “ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த சில அடிப்படை கட்டமைப்பு வசதிகளைச் செய்ய வேண்டியுள்ளது. இதனால், இத்திட்டத்தைச் செயல்படுத்த இன்னும் சில காலம் ஆகும்.அதேசமயம், புதிய மின் இணைப்புகளை வழங்க மீட்டர் தேவைப்படுகிறது. அதற்காக புதியமீட்டர்கள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது” என்றனர்.