சென்னை: பணி நிரந்தரம், ஒய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள்நலப் பணியாளர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மக்கள்நலப் பணியாளர்கள் சங்கம் சார்பில், பணி நிரந்தரம், பணியின் போது இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று நடைபெற்றது. இதில் அமைப்பின் தலைவர் செல்லப்பாண்டியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காலமுறை ஊதியம்: இதுகுறித்து செய்தியாளர்களிடம் செல்லப்பாண்டியன் கூறும்போது, ‘‘தேர்தல் அறிக்கையில் கூறியபடி காலமுறை ஊதியத்துடன் எங்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும். பணிக்காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை மற்றும் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
அதேபோல், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் குடும்ப நிவாரண நிதியும், அவர்களின் வாரிசுகளுக்கு வேலையும் தரவேண்டும். பணி பாதுகாப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு உள்ள சலுகைகள் அனைத்தும் வழங்கி 13,500 மக்கள் நலப் பணியாளர்களையும், அவர்களை நம்பி வாழும் லட்சக்கணக்கான குடும்ப உறுப்பினர்களையும் காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.
500 பேர் கைது: இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பின்னும் போராட்டத்தை தொடர்ந்ததால், மாலை 6 மணியளவில் பணியாளர்களை கலைந்து போக காவல் துறையினர் வலியுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவிக்கவே 500-க்கும் மேற்பட்ட பணியாளர்களை இரவு 7 மணிக்கு போலீஸார் கைது செய்தனர்.
இதனால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் பணியாளர்களை 3 குழுக்களாக பிரித்து புதுப்பேட்டை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைத்தனர்.