சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தமிழகம் மேலும் 2 தங்கப் பதக்கம் வென்றது.
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியின் 3வது நாளான நேற்று மகளிருக்கான பாரம்பரிய யோகா போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை எஸ்.ஹெச்.நவ்யா 64.75 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.
மேற்கு வங்க வீராங்கனையான ஆரண்ய ஹுதைட் 64.42 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், அதே மாநிலத்தைச் சேர்ந்த ரிது மொண்டல் 63.5 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
ஆடவருக்கான வாள்வீச்சில் தளிநபர் சேபர் பிரிவில் தமிழ்நாட்டின் அர்லின் 15-14 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியானாவின் லக்சய் பட்சரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான கபடி போட்டி அரை இறுதி சுற்றில் தமிழ்நாடு – ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 23-41 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தது. ஆடவருக்கான ஹாக்கியில் ஒடிசா அணி 6-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியை வீழ்த்தியது.
மதுரையில் நடைபெற்று வரும் கட்கா போட்டியில்ஆடவருக்கான ஃபாரி சோட்டி அணிகள் பிரிவில் தமிழ்நாடு அணி 108-79 என்ற புள்ளிகள் கணக்கில் ராஜஸ்தானை வென்றது.
இறுதிச் சுற்றில் தமிழகம்: மகளிர் பிரிவு கபடி இறுதிச் சுற்றுக்கு தமிழக அணி முன்னேறியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழக அணியும், இமாச்சல பிரதேச அணிகளும் மோதின.
இதில் தமிழக அணி 37-31என்ற கணக்கில் இமாச்சல பிரதேச அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
பதக்கப் பட்டியல்: பதக்கப் பட்டியலில் தமிழகம் தற்போது முதலிடத்தில் உள்ளது. தமிழக அணி இதுவரை 4 தங்கம், 2 வெண்கலம் வென்றுள்ளது. அதற்கடுத்த இடத்தில் டெல்லி அணி 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களுடன் உள்ளது.